காங்கேயம் அருகே கார் மோதி பள்ளி மாணவன் பலி

காங்கேயம் அருகே பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த மாணவன் மீது கார் மோதியதில் அவன் பரிதாபமாக இறந்தான். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை தேடி வருகிறார்கள்;

Update:2018-08-03 04:04 IST
காங்கேயம்,



இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காங்கேயம்-தாராபுரம் ரோட்டில் வட்டமலை அருகே உள்ள புதுப்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் பிரபாகரன், விவசாயி. இவருடைய மகன் மதுவிகாஸ் (வயது 13). இவன் குளத்துப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். தினமும் வீட்டில் இருந்து மற்ற மாணவர்களுடன் பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம். அதுபோல் நேற்று காலை வழக்கம் போல் மற்ற மாணவர்களுடன் பள்ளிக்கு சென்றான்.

இந்த நிலையில் ஆடி பண்டிகையொட்டி நேற்று மதியம் 2.30 மணிக்கு மேல் பள்ளிக்கூடம் விடுமுறை விடப்பட்டது. இதனால் மாணவர்கள் உற்சாகத்துடன் வெளியே வந்தனர்.

இதனால் மாணவன் மதுவிகாசும் மற்ற மாணவர்களுடன் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தான். குள்ளம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்த அவன் அங்குள்ள சாலையை கடக்க முயன்றான். அப்போது காங்கேயத்தில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற ஒரு கார் மாணவன் மதுவிகாஸ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் மது விகாஸ் பலத்த காயம் அடைந்தான். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மதுவிகாஸ் பரிதாபமாக இறந்தான்.


இந்த விபத்து குறித்து ஊதியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான கார் டிரைவரை தேடிவருகிறார்கள்.

பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவன் கார் மோதி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்