கற்பழிப்பு முயற்சியில் பள்ளி மாணவி கொலை: போலீஸ் நிலையம், தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்

கற்பழிப்பு முயற்சியில் பள்ளி மாணவியை கொலை செய்த கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2018-08-02 22:00 GMT

கோலார் தங்கவயல்,

கற்பழிப்பு முயற்சியில் பள்ளி மாணவியை கொலை செய்த கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி நேற்று மாலூர் டவுன் போலீஸ் நிலையம், தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

பள்ளி மாணவி கொலை

கோலார் மாவட்டம் மாலூர் டவுன் பகுதியை சேர்ந்தவள் 15 வயது சிறுமி. இவள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தாள். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும், அந்த மாணவி தனது தோழியுடன் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தாள். அவள் மாலூர் டவுன் ரெயில் நிலையம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பள்ளி மாணவியின் கையை பிடித்து இழுத்தனர்.

மேலும் பள்ளி மாணவியை அருகே உள்ள குடோனுக்குள் இழுத்து சென்று கற்பழிக்க முயன்றனர். அப்போது மாணவி கூச்சல் போட்டதால் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள், மாணவியின் தலையில் கல்லால் அடித்தனர். இதில் பலத்த காயம் அடைந்த மாணவி பரிதாபமாக இறந்தாள்.

போலீஸ் நிலையம்– தாலுகா அலுவலகம் முற்றுகை

இதுகுறித்து மாலூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த நிலையில் பள்ளி மாணவியை கொலை செய்த கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று மாலூர் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் 800–க்கும் மேற்பட்டவர்கள் மாலூர் டவுன் போலீஸ் நிலையம், மாலூர் தாலுகா அலுவலகம், மாலூர் டவுனில் உள்ள முக்கிய பகுதியான மாரம்மா சர்க்கிள் ஆகிய 3 பகுதிகளில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தின் போது பள்ளி மாணவியை கொலை செய்த கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினர். இதுபற்றி அறிந்ததும் கோலார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோகிணி கடோச் போராட்டங்கள் நடத்த 3 இடங்களுக்கும் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

பரபரப்பு

போராட்டம் நடத்திய மாணவர்களுடன் பல்வேறு மாணவ அமைப்பினரும், விவசாய சங்கத்தினரும் கலந்து கொண்டார்கள். சில வியாபாபாரிகள் தாங்களாக முன்வந்து கடைகளை அடைத்து இருந்தனர். இந்த நிலையில் மாலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நஞ்சப்பா போராட்டம் நடத்திய மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்கள். 3 இடங்களில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் மாலூர் டவுன் முழுவதும் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்