வாலாஜாபாத் அருகே பிரசவத்திற்கு சென்ற பெண்ணுக்கு 108 ஆம்புலன்சிலேயே பெண் குழந்தை பிறந்தது
வாலாஜாபாத் அருகே பிரசவத்திற்கு சென்ற பெண்ணுக்கு 108 ஆம்புலன்சிலேயே பெண் குழந்தை பிறந்தது.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள புல்லம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 27). விவசாயி. இவரது மனைவி மணிமேகலா (24). நிறைமாத கர்ப்பிணியான மணிமேகலாவுக்கு பிரசவ வலி அதிகமானது.
இதைத்தொடர்ந்து பிரசவ சிகிச்சைக்காக வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பிரசவ வலி அதிகம் ஆனது.
பெண் குழந்தை பிறந்தது
இதனால் 108 ஆம்புலன்சை திருமுக்கூடல் கிராமம் அருகில் ஓரமாக நிறுத்தினார்கள். அங்கு கிராம மக்கள் திரண்டு வந்தனர். மணிமேகலாவுக்கு ஆம்புலன்ஸ் வாகன மருத்துவ உதவியாளர் கோப்பெருந்தேவி முதல் உதவி செய்தார். மணிமேகலாவுக்கு அங்கேயே பெண் குழந்தை பிறந்தது.
தாயும், சேயும் நல்ல முறையில் இருந்ததை தொடர்ந்து மீண்டும் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே கொண்டு சென்று வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
பிரசவ வலியில் துடித்த மணிமேகலாவுக்கு சாமர்த்தியமாக முதல் உதவி செய்த மருத்துவ உதவியாளர் கோப்பெருந்தேவி, ஆம்புலன்ஸ் டிரைவர் பழனிவேல் ஆகியோரை கிராம மக்கள் பாராட்டினர்.