போலீசார் மீது தாக்குதல் நடத்திய பிரான்ஸ் ராணுவ வீரர் உள்பட 4 பேர் கைது

புதுவையில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய பிரான்ஸ் ராணுவ வீரர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-08-02 21:44 GMT
புதுச்சேரி,

புதுவை பெரியகடை போலீசார் தனசேகரன், சுரேஷ் ஆகியோர் கடந்த 31-ந்தேதி நள்ளிரவு கடற்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் வேகமாக வந்த மர்ம கும்பலை கடற்கரை சாலையில் இருந்த ஒருவர் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பலை சேர்ந்த 4 பேர் அவரை சரமாரியாக தாக்கினர்.

இதைப்பார்த்ததும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த 4 பேரும் போலீசார் வைத்திருந்த தடியை பறித்து அந்த தடியால் போலீசாரை தாக்கினர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த போலீசார் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் போலீசார் மீது தாக்குதல் நடத்தியது புதுவை வானரப்பேட்டை செட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் ரிச்சர்ஸ் (வயது 37) ஜான்பால் (41) ஜார்ஜ் மாத்யூ (26), சரவணன் (25) என்பது தெரியவந்தது. இவர்களில் ஜார்ஜ் ரிச்சர்ஸ் பிரான்ஸ் நாட்டின் ராணுவத்தில் வீரராக பணியாற்றி வருவதும், ஜான்பால் பிரான்சில் உள்ள தூதரகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை செய்து வருவதும், ஜார்ஜ் மாத்யூ பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர் என்பதும் தெரிய வந்தது.

விடுமுறைக்காக புதுவை வந்த அவர்கள் மதுகுடித்த போதையில் போலீசாரை தாக்கியது விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து பிரான்ஸ் ராணுவ வீரர் ஜார்ஜ் ரிச்சர்ஸ் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை கைது செய்தது குறித்து புதுவையில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்