தேனியில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: போலி மதுபானம் தயாரித்து விற்பனை?
தேனி பகுதியில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் 2 பேர் மதுபானம் குடித்து இறந்துள்ள நிலையில் மதுபான பிரியர்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.
தேனி,
தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பனை அதிக அளவில் நடந்து வருகிறது. குறிப்பாக தேனி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பஸ் நிலையம், மயானம், ஆற்றங்கரையோர பகுதிகள், கண்மாய் கரைகள், கட்டண கழிப்பிடங்கள் என பல இடங் களை மதுபானம் விற்பனை செய்யும் இடங்களாக சிலர் மாற்றி உள்ளனர்.
தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையம், காமராஜர் பஸ் நிலையம், மீறு சமுத்திரம் கண்மாய் கரை போன்ற இடங்களில் விடிய விடிய மதுபானம் விற்பனை நடந்து வருகிறது. இதுகுறித்து பல்வேறு புகார்கள் கூறப்பட்டாலும் பெயரளவிலான நடவடிக்கைகளையே போலீசார் மேற்கொள்வதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர். மதுபானத்தை மொத்தமாக வாங்கி விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்படுவது இல்லை என்பதோடு, அனுமதியின்றி விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் கூலிக்காக மதுபாட்டில் விற்பனை செய்யும் முதியவர்களே மாவட்டத்தில் அதிக அளவில் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இதற்கிடையே தேனி பகுதியில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக குடிமகன்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு உள்ளது. அதற்கு நகர் பகுதியில் மது பானம் குடித்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே காரணமாக உள்ளது. தேனி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டில் 10-க்கும் மேற்பட்டவர்கள் மதுபானம் குடித்து பொது இடங்களில் பிணமாக கிடந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் தேனி காமராஜர் பஸ் நிலையம் அருகில் 2 பேர் இவ்வாறு இறந்துள்ளனர். இவர்கள் அதிக அளவில் மது குடித்ததால் இறந்ததாக போலீஸ் நிலையத்தில் வழக் குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தேனி பகுதியில் போலி மதுபானம் விற்பனை செய்யப் படுவதாக கூறப்படுகிறது. எனவே, போலி மதுபானம் மற்றும் விஷத்தன்மையுடன் கூடிய மதுபானம் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்டறிய போலீசாரும், கலால் துறை அதிகாரிகளும் இணைந்து முன்வர வேண்டும். அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், இவ்வாறு அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்பவர்களுக்கு டாஸ்மாக் கடைகளில் பெட்டி, பெட்டியாக மது வகைகளை மொத்தமாக விற்பனை செய்யும் டாஸ்மாக் ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர் களின் கோரிக்கையாக உள்ளது.