மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. தொடங்கி வைத்தார்

கீரனூர் அருகே ஆவராங்குடிபட்டியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியை மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. வரதராஜூ தொடங்கி வைத்தார்.

Update: 2018-08-02 22:45 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள ஆவராங்குடிபட்டியில் 14 ஏக்கர் பரப்பளவில் மகாராஜா சூட்டிங் ரேன்ஜ் என்ற பெயரில் சர்வதேச தரத்துடன் நவீன துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இதனை புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவரும், மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவருமான ராஜகோபால தொண்டைமான் உருவாக்கினார். இந்த மையத்தில் மாநில அளவிலான 44-வது ஷாட்கன் துப்பாக்கி சுடும் போட்டிகள் நேற்று காலை தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளை மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ துப்பாக்கியால் இலக்கை சுட்டு தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், “இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 2 நாட்களுக்கு முன்பு இங்கு வந்து இந்த பயிற்சி மையத்தை பார்த்தேன். இந்த பயிற்சி மையம் அதிநவீன தொழில்நுட்பத்துடனும், பல வசதிகளுடனும் இருப்பதை பார்த்து வியந்துபோனேன். இந்த பயிற்சி மையம் இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த போட்டியில் கலந்துகொள்ளும் அனைவரையும் பாராட்டுகிறேன்” என்றார்.

நிகழ்ச்சியில், ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ராஜகோபால தொண்டைமான், தமிழ்நாடு துப்பாக்கி சுடும் கழகத்தின் செயலாளர் ரவிகிருஷ்ணன், தேசிய ரைபிள் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.வி.சீதாராமராவ், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கற்பூரசுந்தரபாண்டியன், கர்நாடகா துப்பாக்கி சுடும் கழகத்தின் செயலாளர் சுஷில், பிரித்விராஜ் தொண்டைமான், ராதாநிரஞ்சனி ராஜாயி, திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் சென்னை, கோவை, மதுரை, நாகை, புதுச்சேரி, தூத்துக்குடி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 144 போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

போட்டிகளின் முடிவில் வெற்றி பெறும் வீரர்-வீராங்கனைகளுக்கு மாவட்ட கலெக்டர் கணேஷ் பரிசுகளை வழங்குகிறார். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெறுபவருக்கு புதுக்கோட்டை மகாராஜா சுழற்கோப்பையும், சிங்கிள் ட்ராப் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறுபவருக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சுழற்கோப்பையும், ஸ்கீட் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறுபவருக்கு டி.வி. அப்பாராவ் சுழற்கோப்பையும், டபுள் ட்ராப் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறுபவருக்கு நமசி அண்ட் கண்ணன் சுழற்கோப்பையும் பரிசாக வழங்கப் படும்.

நேற்று நடந்த டபுள் டிராப் போட்டியில் மொத்தம் 86 பேர் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் பிரிவில் தஞ்சை ரைபிள் கிளப்பை சேர்ந்த நாதனியல் தங்க பதக்கத்தையும், ஆண்கள் ஜூனியர் பிரிவில் ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த ஆர்.நவனீதன் தங்க பதக்கத்தையும், பெண்கள் பிரிவில் கோவை ரைபிள் கிளப் நிவேதா தங்க பதக்கத்தையும், பெண்கள் ஜூனியர் பிரிவில் ஐ.புவன்ஸ்ரீ தங்க பதக்கத்தையும், மூத்தோருக்கான பிரிவில் டி.வி.சீதாராமராவ் தங்க பதக்கத்தையும் பெற்றனர். ஆண்கள் மற்றும் பெண்கள் குழு பிரிவுகளில் ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் தங்க பதக்கங்களை வென்றது. 

மேலும் செய்திகள்