கொல்கத்தா - கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம் செல்லும் வடமாநில தன்னார்வலர்கள் சென்னை வந்தனர்
கொல்கத்தாவிலிருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம் செல்லும் வடமாநில தன்னார்வலர்கள் சென்னை வந்தனர்.;
சென்னை,
ரத்த தான விழிப்புணர்வை வலியுறுத்தி இந்திய செஞ்சிலுவை சங்கம், கொல்கத்தா ‘ஜாதவ்பூர் யூத் அட்வெண்ட்ஜர் வெல்பேர் அசோசியேசன்’ ஆகியவற்றின் சார்பில் கொல்கத்தாவை சேர்ந்த தன்னார்வலர்கள் ஜெய்தேவ் ராவ்த் (வயது 49), ஷிப்லால் பெஸ்ரா(22) ஆகியோர் கொல்கத்தாவில் இருந்து கன்னியாகுமரிக்கு (2,500 கி.மீ. தூரம்) சைக்கிள் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
கொல்கத்தாவில் இருந்து கடந்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி பயணத்தை தொடங்கிய அவர்கள், ஒடிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தனர். கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு 32 நாட்களில் வந்துள்ளனர். சென்னையில் இருந்து திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு (600 கி.மீ. தூரம்) இன்னும் 10 நாட்களில் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
கன்னியாகுமரி செல்லும் அவர்கள், அங்குள்ள விவேகானந்தர் பாறையில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி, பின்னர் அங்கிருந்து மீண்டும் சைக்கிள் பயணமாகவே கொல்கத்தாவுக்கு திரும்புகின்றனர்.