இஸ்ரோவில் 36 ஆண்டுகள் பணியாற்றியது முழுதிருப்தி அளிக்கிறது ஓய்வுபெற்ற விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

இஸ்ரோவில் 36 ஆண்டுகள் பணியாற்றியது முழுதிருப்தி அளிக்கிறது என்று ஓய்வுபெற்ற விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

Update: 2018-08-02 22:00 GMT

பெங்களூரு,

இஸ்ரோவில் 36 ஆண்டுகள் பணியாற்றியது முழுதிருப்தி அளிக்கிறது என்று ஓய்வுபெற்ற விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

புதிய சாதனை

பெங்களூரு இஸ்ரோ மைய இயக்குனராக பணியாற்றியவர் மயில்சாமி அண்ணாதுரை. இவர் கடந்த மாதம் (ஜூலை) 31–ந் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அறிவியல் விஞ்ஞானியான இவர் இஸ்ரோவில் 1982–ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அங்கு 36 ஆண்டுகள் காலம் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். இறுதியாக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கைகோள் மைய இயக்குனராக கடந்த 2015–ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.

அவருடைய தலைமையில் சந்திராயன் விண்கலம் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக சந்திரனுக்கு அனுப்பப்பட்டது. இதன் மூலம் மயில்சாமி அண்ணாதுரை விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனை படைத்தார். இதனால் இந்திய அளவில் புகழ் பெற்றார். அவருக்கு பத்மஸ்ரீ உள்பட பல்வேறு விருதுகள் கிடைத்தன.

முழு திருப்தி தருகிறது

சந்திராயன்–2 விண்கலத்தை வடிவமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். அந்த பணி தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. அவர் இஸ்ரோவில் 50–க்கும் மேற்பட்ட செயற்கைகோள்களை உருவாக்கி விண்ணில் செலுத்தியதில் முக்கிய பங்காற்றி உள்ளார். பணி ஓய்வு பெற்ற மயில்சாமி அண்ணாதுரை ‘தினத்தந்தி‘ நிருபருக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இஸ்ரோவில் நான் 36 ஆண்டுகள் பயணித்த பாதையை திரும்பி பார்க்கிறேன். நான் ஆற்றிய பணி எனக்கு முழு திருப்தியை அளிக்கிறது. இஸ்ரோவின் விண்வெளி ஆராய்ச்சியில் நான் 50–க்கும் அதிகமான செயற்கைகோள்களை உருவாக்கி வழங்கி இருக்கிறேன். இதில் சந்திராயன்–1, மங்கள்யான், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைகோள்கள், கார்டோ–2 தொடர் செயற்கைகோள்கள் அடங்கும். இதில் 6 மாணவர்கள் தயாரித்த செயற்கைகோள்களும் இருக்கின்றன.

முக்கிய பங்காற்றினேன்

2 கிலோ முதல் 10 டன் எடை வரை செயற்கைகோள்களை உருவாக்கினேன். முன்பு ஆண்டுக்கு 2, 3 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டு வந்தன. அந்தவொரு நிலையை மாற்றி ஆண்டுக்கு 10 முதல் 12 செயற்கைகோள்களை உருவாக்கி விண்ணில் செலுத்தினோம். இது செயற்கைகோள் வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். அதில் நான் மிக முக்கிய பங்காற்றினேன்.

நான் இயக்குனராக பணியில் சேர்ந்தபோது செயற்கைகோள் மையம், பீனியாவில் உள்ள தொழிற்பேட்டையில் அமைந்து இருந்தது. இன்று அந்த மையத்தை மேம்படுத்தி இருக்கிறேன். அதன் உருவத்தை மாற்றி அமைத்து, பல்வேறு சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி உள்ளேன். இன்று அந்த மையத்தில் சர்வதேச தரத்தில் செயற்கைகோள்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அங்கு அதிக எண்ணிக்கையில் செயற்கைகோள்கள் வடிவமைக்கப்படுகின்றன.

தமிழில் 3 புத்தகங்கள்

இந்த பணிக்கு இடையில் விண்வெளி அறிவியல் குறித்து தமிழில் 3 புத்தகங்களை எழுதினேன். சந்திராயன்–2 விண்கலம் விண்ணில் ஏவுவதற்கு முன்பு ஓய்வு பெற்றது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது. அந்த சந்திராயன்–2 விண்கலத்தை உருவாக்கும் பணியில் நான் முழுமையாக ஈடுபட்டு இருந்தேன். ஓய்வுக்கு பிறகு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று இன்னும் நான் முடிவு செய்யவில்லை.

அடுத்த சில நாட்கள் நான் வீட்டில் தனியாக அமர்ந்து என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசிப்பேன். எனது முழு அனுபவம் மற்றும் அறிவியல், தொழில்நுட்பத்தில் எனக்கு இருக்கும் பற்றை பயன்படுத்திக்கொள்ள இந்திய இளைஞர்கள் முன்வர வேண்டும். என்னை பொறுத்தவரையில் எதுவாக இருந்தாலும் நான் திட்டமிட்டு செயல்படுவேன்.

இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

மேலும் செய்திகள்