தனி மாநிலம் கோரி போராட்டம் வடகர்நாடகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை
தனிமாநிலம் கோரி வட கர்நாடகத்தில் நேற்று போராட்டம் நடந்தது. இருப்பினும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.;
பெங்களூரு,
தனிமாநிலம் கோரி வட கர்நாடகத்தில் நேற்று போராட்டம் நடந்தது. இருப்பினும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தனி மாநிலம் கோரி கையெழுத்து இயக்கம் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
முழு அடைப்புகர்நாடக பட்ஜெட்டில் வடகர்நாடகம் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், மடாதிபதிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர், முதல்–மந்திரி குமாரசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். வட கர்நாடகத்தில் 13 மாவட்டங்களில் 2–ந் தேதி(அதாவது நேற்று) முழு அடைப்பு நடைபெறும் என்று வட கர்நாடக தனி மாநில போராட்டக் குழுவின் தலைவர் சோமசேகர் கோதம்பரி அறிவித்தார்.
இதற்கு தொடக்கத்தில் ஆதரவு தெரிவித்த பா.ஜனதாவை சேர்ந்த வட கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் சிலர், கட்சியின் எதிர்ப்பை அடுத்து அவர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர். இதனால் தனி மாநில கோரிக்கை போராட்டம் தீவிரம் அடைந்தது. இது குமாரசாமிக்கு சிக்கலையும் ஏற்படுத்தியது. இதையடுத்து வடகர்நாடக தனிமாநில போராட்டக் குழு நிர்வாகிகளை நேரில் அழைத்து குமாரசாமி பேசினார்.
குமாரசாமி உறுதிமொழிகர்நாடகம் பிளவுபடுவதை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது என்றும், வடகர்நாடகம் எனது உயிரின் ஒரு பாகம் என்றும் குமாரசாமி அந்த கூட்டத்தில் பேசினார். மேலும் வட கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும், அந்த பகுதியில் சுற்றுப்பயணம் செய்து கிராமங்களில் தங்கி பிரச்சினைகளை தீர்ப்பதாகவும் உறுதியளித்தார். ஆயினும் போராட்டக் குழுவினர் திட்டமிட்டபடி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். ஆனால் பல அமைப்புகள் மற்றும் மடாதிபதிகள் ஆதரவை வாபஸ் பெற்றனர்.
இந்த நிலையில் கடைசி நேரத்தில் அதாவது நேற்று முன்தினம் இரவு அந்த போராட்டக் குழுவினர் முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். வடகர்நாடகத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவதாக குமாரசாமி உறுதிமொழி அளித்துள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் வடகர்நாடகத்தில் நேற்று அடையாள போராட்டங்கள் நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
பாதிப்பு இல்லைஇந்த நிலையில் வட கர்நாடகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் அரசு பஸ்கள், பள்ளி–கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் உண்டாகவில்லை. ஆனால் அந்த பகுதிகளில் சில இடங்களில் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக கலபுரகியில் வட கர்நாடகத்திற்கு தனி மாநிலம் கோரி கையெழுத்து இயக்கம் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெலகாவியில் சில கன்னட அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரோஜா பூக்களை பொதுமக்களுக்கு கொடுத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். அகண்ட கர்நாடகத்தை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். வட கர்நாடகத்தில் போராட்டம் நடத்திய பல்வேறு அமைப்பினர், வட கர்நாடகத்திற்கு ஏற்பட்டுள்ள அநீதியை சரிசெய்யமாறு வலியுறுத்தினர். இதையொட்டி வடகர்நாடகத்தின் 13 மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.