தாம்பரம் கோர்ட்டில் விபத்து வழக்கில் ஆஜராக ஆள்மாறாட்டம்; வாலிபர் கைது
தாம்பரம் கோர்ட்டில், விபத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராக ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாம்பரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு சாலை விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
இந்த வழக்கு தாம்பரம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த விபத்து வழக்கு விசாரணையில் நேற்று முன்தினம் தாம்பரம் கோர்ட்டில் ஆஜராகும்படி மணிகண்டனை போலீசார் அழைத்து இருந்தனர்.
ஆள்மாறாட்டம்
இந்தநிலையில் மணிகண்டன் என சொல்லி தாம்பரம் கோர்ட்டில் வாலிபர் ஒருவர் ஆஜரானார். அப்போது கோர்ட்டில் விசாரணைக்கு வந்து இருந்த போலீசார், அந்த வாலிபர் மணிகண்டன் இல்லை. அவரது பெயரைச் சொல்லி வேறு ஒரு நபர் ஆஜராகி ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு இருப்பதை கண்டு பிடித்தனர்.
இது தொடர்பாக கோர்ட்டு ஊழியர் ரேணுகாதேவி, தாம்பரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரவீண், ஆள்மாறாட்டம் செய்து கோர்ட்டில் ஆஜரான வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினார்.
சிறையில் அடைப்பு
அதில் அவர், மதுராந்தகம் பாப்பநல்லூர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த கண்ணன்(32) என்பது தெரியவந்தது. மணிகண்டனின் உறவினரான கண்ணன், விபத்து வழக்கில் மணிகண்டனுக்கு பதிலாக இவர் கோர்ட்டில் ஆஜரானது தெரியவந்தது.
இதையடுத்து ஆள் மாறாட்டம் செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கைதான கண்ணனை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.