குழந்தைகளை தத்தெடுப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு சென்னையில் நடந்தது
குழந்தைகளை தத்தெடுப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது.;
சென்னை,
சமூக பாதுகாப்புத்துறை மற்றும் ‘கிரைஸ்ட் பெயித் ஹோம் பார் சில்ட்ரன்’ (சி.எப்.எச்.சி.) அமைப்பு சார்பில் சட்டரீதியாக குழந்தைகளை தத்தெடுக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் நடந்தது. அமைப்பின் நிறுவன தலைவர் மெய்டா ராஜா தலைமை தாங்கினார். இயக்குனர் சுனிதா ஜோ முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கில் சமூக பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரி ஏ.ஆல்பிரட் டேவிட், தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் தலைவர் எம்.பி.நிர்மலா, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராஜேஸ்வரி, அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் அரசர் சீராளர் உள்பட பலர் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் குழந்தைகளை தத்தெடுக்க சட்ட வழிமுறைகள் என்னென்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
சட்டவிதிகள்
இதுகுறித்து சி.எப்.எச்.சி. அமைப்பின் இயக்குனர் சுனிதா ஜோ கூறுகையில், ‘குழந்தைகள் தத்தெடுப்புக்கு சட்டவிதிகள் உள்ளன. www.cara.nic.in எனும் இணையதளத்தில் பதிவு செய்து, பின்னர் வழிகாட்டு நிறுவனங்கள் மூலமே குழந்தையை தத்தெடுக்க வேண்டும். அதுதான் சட்டரீதியான நடைமுறை. இது இல்லாமல் நடக்கும் எந்த குழந்தைகள் தத்தெடுப்பும் குற்றமாகும். அதை உணர்த்தும் வகையிலேயே இந்த கருத்தரங்கு நடக்கிறது’, என்றார்.
முன்னதாக சென்னை கிறிஸ்தவ கல்லூரி மாணவர் கள் குழந்தைகள் தத்தெடுப்பு குறித்து ‘மைம் ஆக்ட்’ முறையில் நடித்து காட்டினர்.