அரசு பணியில் சேர விரும்புபவர்கள் போட்டி தேர்வுகளில் கவனம் செலுத்திட வேண்டும்

அரசு பணியில் சேர விரும்புபவர்கள் போட்டி தேர்வுகளில் கவனம் செலுத்திட வேண்டும் என்று வேலை வாய்ப்பு பயிற்சித்துறை ஆணையர் கூறினார்.;

Update: 2018-08-02 22:30 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேற்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இந்த முகாமை வேலை வாய்ப்புத்துறை கோவை மண்டல இணை இயக்குனர் லதா தொடங்கி வைத்தார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வரவேற்றார். இந்த முகாமில் 10-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, ஆட்களை தேர்வு செய்தனர்.

முகாமில் கலந்து கொண்ட 148 பேர்களில் 52 பேர் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். பணிநியமன ஆணைகளை வழங்கி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் ஜோதி நிர்மலாசாமி வழங்கினார்.

முகாமில் அவர் பேசியதாவது:-

கடந்த காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுகள் மூலம் அரசு பணிகளுக்கு நியமனம் செய்யப்பட்டது. தற்போது, அனைத்து அரசு பணிகளும் போட்டி தேர்வுகள் மூலம் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படுகிறது. போட்டி தேர்வுகள் எழுத உள்ளவர்கள் மனம் தளராமல் திட்டமிட்டு தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். பெண்கள் அதிகளவில் போட்டி தேர்வுகளில் பங்கேற்க வேண்டும்.

அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் இளைஞர்கள், பெண்கள் பங்கேற்று தனியார் துறையில் வேலைவாய்ப்பை பெறலாம். மேலும், சொந்த தொழில் மேற்கொள்ளும் வகையில் திறன் பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

திறன் பயிற்சி பெற்றவர்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 70 சதவீதம் வேலைவாய்ப்பை பெற்று தருகிறோம். தனியார் துறையில் பணி நியமன ஆணை பெறுபவர்கள், தங்களது பணிகளில் கவனம் செலுத்தி, அந்நிறுவனத்தில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும். அரசு பணியில் சேர விரும்புவர்கள் போட்டி தேர்வுகளில் கவனம் செலுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற திருநாவுக்கரசு, கலைச்செல்வி மற்றும் கிருபாகரன் ஆகியோருக்கு ஆணையர் ஜோதிநிர்மலாசாமி பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தனியார்த்துறை சேர்ந்த நிறுவன பிரதிநிதிகள், இளைஞர்கள், பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்