கோவை ஆவாரம்பாளையம் ரெயில்வே மேம்பால பணிகள் தாமதம் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவை ஆவாரம்பாளையம் ரெயில்வே மேம்பால பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-08-02 22:30 GMT
கணபதி,

கோவையில் இருந்து சத்தி சாலைக்கு ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ரெயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டும். இந்த ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டதால் நீண்டநேரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே இங்கு மேம்பாலம் கட்டப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

கணபதி சத்தி ரோட்டில் இருந்து எளிதாக அவினாசி ரோடு, பீளமேடு பகுதிகளை அடையும் வகையில் ஆவாரம்பாளையம் ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

ரெயில்பாதையையொட்டி உள்ள பாலத்தை ரெயில்வே நிர்வாகமும், இருபுறமும் சாலைவரை நீட்டிப்பதற்கான பணியை தமிழக பொதுப்பணித்துறையும் மேற்கொள்ளவும், மொத்தம் ரூ.17 கோடி மதிப்பில் பாலம் கட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்காக அந்தப்பகுதியின் ரோட்டின் இருபுறமும் கடைகள், வீடுகளை, நிலங்களை வைத்திருந்தவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கவும், நிலங்களை கையகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு பாலப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 1 மாதமாக பாலப்பணிகள் மிகவும் மந்தமான நிலையில் நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் குறுந்தொழில் முனைவோர் மிகுந்த சிரமப்படுகிறார்கள்.

பாலத்திற்கான தூண்கள் மட்டுமே இதுவரை அமைக்கப்பட்டு உள்ளது. பாலத்தில் இருந்து வாகனங்கள் இறங்கி பிரிந்து செல்ல பாதைகளை அமைப்பதற்கு இதுவரை அடையாள குறியிடப்பட்டு மட்டும் உள்ளது. மேற்கொண்டு பணிகள் நடைபெறவில்லை. இதனால் இந்த பாலப்பணிகள் நீண்டநாள் ஆகும் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள். ரோட்டினை இருபுறமும் அடைத்து 6 மாதங்களை கடந்து விட்ட நிலையில் மந்தமான நிலையில் பணிகள் நடைபெறுவது பொதுமக்களை பாதித்துள்ளது. எனவே பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த ரோட்டில் கடை நடத்தி வரும் ஒரு பெண் கூறும்போது, பாலப்பணிகள் ஆரம்பித்து 6 மாதங்கள் ஓடிய நிலையில் எங்கள் தின வியாபாரம் மிகவும் பாதித்துள்ளது. அன்றாடங் காய்ச்சிகளான நாங்கள் இந்தப் பாலப்பணி விரைவில் முடிந்தால் எங்களுக்கு மீண்டும் ஓட்டல் தொழில் சிறப்பாக நடைபெறும். வாகன ஓட்டிகளும் சிரமம் இல்லாமல் இந்த ரெயில்வே பாதையை கடக்க முடியும். பல கிலோ மீட்டர் சுற்றி வரவேண்டிய தேவை இருக்காது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்து தரவேண்டும் என்று தெரிவித்தார்.

ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, ரெயில்வே பாதைக்கு மேல் பகுதியில் உள்ள பாலத்தை ரெயில்வே நிர்வாகம் கட்டி முடிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. இந்த பணிகள் ஒருசில மாதங்களுக்குள் முடித்துவிடுவோம். மற்ற பணிகளை பொதுப்பணித்துறைதான் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். பொதுப்பணித்துறையினரும் இந்த பாலப்பணிகளை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்