மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கண்டித்து 7–ந் தேதி வேலைநிறுத்தம்: தமிழகத்தில் 14 லட்சம் வாகனங்கள் ஓடாது

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கண்டித்து 7–ந் தேதி நடைபெறும் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் 14 லட்சம் வாகனங்கள் ஓடாது.

Update: 2018-08-02 21:30 GMT

தூத்துக்குடி,

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கண்டித்து 7–ந் தேதி நடைபெறும் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் 14 லட்சம் வாகனங்கள் ஓடாது என்று சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநில பொது செயலாளர் மூர்த்தி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நேற்று மதியம் தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சட்ட திருத்தம்

மத்திய பா.ஜனதா அரசு, மோட்டார் வாகன சட்டம் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மோட்டார் வாகன சட்டம் திருத்தம் கொண்டு வந்தால், இந்தியாவில் உள்ள சிறு தொழில்கள் பாதிக்கப்படும். மோட்டார் துறை கார்ப்பரேட் வசம் சென்று விடும். ஆகையால் சட்டத்தை திருத்தக் கூடாது என்று சி.ஐ.டி.யு. மற்றும் அகில இந்திய சம்மேளனமும் தொடர்ந்து போராடி வருகிறோம். இந்த போராட்டத்தின் காரணமாக மத்திய அமைச்சகம் முழுமையாக சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை. தற்போது சட்ட திருத்தம் என்ற முறையில் சட்டத்தை கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.

வேலைநிறுத்தம்

இதனால் பா.ஜனதா அரசு சட்டத்தை திருத்தக்கூடாது என்று வலியுறுத்தி வருகிற 7–ந் தேதி நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அனைத்து தொழிற்சங்கங்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளி உள்ளிட்டவைகளை இணைத்து வேலைநிறுத்தத்தை நடத்த உள்ளோம். இந்த வேலை நிறுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 14 லட்சம் வாகனங்கள் ஓடாது. 40 லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்பார்கள். தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டத்தில் 5 லட்சம் பேரை பங்கெடுக்க வைக்க முடிவு செய்து உள்ளோம். மாவட்ட தலைநகரங்களில் இதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

7–ந் தேதி தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவோம். ஆட்டோ, டாக்சி, லாரி, வேன் இயங்காது. ஒர்க்ஷாப் திறக்கபடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

முன்னதாக வேலைநிறுத்தம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் சி.ஐ.டி.யு.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்