காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா 11-ந் தேதி நடக்கிறது
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா 11-ந் தேதி நடக்கிறது. நேற்று நடந்த கால்நாட்டு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
விக்கிரமசிங்கபுரம்,
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா 11-ந் தேதி நடக்கிறது. நேற்று நடந்த கால்நாட்டு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சொரிமுத்து அய்யனார் கோவில்
பாபநாசம் அருகே உள்ள காரையாறு காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோவில் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.
விழாவை முன்னிட்டு நேற்று காலை கோவிலில் உள்ள மகாலிங்கசுவாமி, சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் காலை 10 மணியளவில் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க, கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது.
திரளான பக்தர்கள்
இதில், கோவில் அறங்காவலர் சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி, கிட்டு, கணக்காளர் செங்கொடி, மணியம் ராக்சமுத்து உள்பட பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழாவை யொட்டி அம்பை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவ தேஜா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கூடாரம் அமைக்க தடை
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 11-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி, வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தனியார் வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது.
அகஸ்தியர்பட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள இடத்தில் தனியார் வாகனங்களை நிறுத்திவிட்டு, அரசு பஸ்சில் கோவிலுக்கு செல்ல வேண்டும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். வனப்பகுதிக்குள் மண்வெட்டி கொண்டு சுத்தம் செய்து கூடாரம் அமைக்க தடை செய்யப்பட்டு உள்ளது. பிளாஸ்டிக், பாலித்தீன், மதுபாட்டில்கள் தடை செய்யப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் வசிக்கும் பறவைகளின் நலன் கருதி, கோவில் வளாகத்தில் பிராய்லர் கோழி தடை செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைதல் கூடாது.
சோப்பு, ஷாம்பு விற்கக்கூடாது
கோவிலில் குத்தகைக்கு கடை எடுத்தவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், சோப்பு, ஷாம்பு, எண்ணெய், சூதாட்ட அட்டைகள், போதை பாக்குகள், பீடி, சிகரெட், குளிர்பானங்கள் விற்பனை செய்யக்கூடாது. வி.ஐ.பி. பாஸ் ஒருமுறை மட்டுமே செல்லும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்டவும், வனம் மற்றும் வனவளங்களை பாதுகாக்கவும் வனத்துறையினர் சுமார் 200 பேரும், தன்னார்வ தொண்டர்கள் மற்றும் என்.எஸ்.எஸ். மாணவர்கள் 150 பேரும் பணியில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.