நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் ரூ.30 லட்சத்தில் டயனோசர் பூங்கா புதுப்பிப்பு அருங்காட்சியக தொழில்நுட்ப இயக்குனர் தகவல்

நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் ரூ.30 லட்சம் செலவில் டயனோசர் பூங்கா புதுப்பிக்கப்பட உள்ளதாக பெங்களூரு விசுவேசுவரய்யா அருங்காட்சியக தொழில்நுட்ப இயக்குனர் மதன்கோபால் கூறினார்.

Update: 2018-08-02 21:30 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் ரூ.30 லட்சம் செலவில் டயனோசர் பூங்கா புதுப்பிக்கப்பட உள்ளதாக பெங்களூரு விசுவேசுவரய்யா அருங்காட்சியக தொழில்நுட்ப இயக்குனர் மதன்கோபால் கூறினார்.

இதுகுறித்து அவர் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அறிவியல் மையம்

நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் அறிவியல் தொடர்பான அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த அரங்குகளை ஏராளமான மாணவ-மாணவிகள் பார்த்து வருகிறார்கள். குறிப்பாக, எலக்ட்ரானிக் அரங்குகள், 3 டி அரங்குகள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் அறிவியல் அறிவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.

டயனோசர் பூங்கா

அறிவியல் மையத்தில் டயனோசர் பூங்கா உள்ளது. இந்த பூங்கா ரூ.30 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. பல விலங்குகள் வடிவமைக்கப்பட்டு, அவை நகரும் வகையிலும், ஒலி எழுப்பும் வகையிலும் அமைக்கப்பட உள்ளன. இவை மின்னணு சாதனங்கள் மூலம் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட உள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து பணிகளும் முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் அறிவியல் நிகழ்வுகளை கண்டுகொள்ளும் வகையில், அறிவியல் மையத்தில் பாப்புலர் அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இந்த அரங்கம் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது. இங்கு 30 வகையான கண்காட்சிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த அரங்கம், மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

முன்பதிவு

புதுச்சேரி, திருச்சி, கோவை ஆகிய ஊர்களில் அறிவியல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய அரங்குகள் மத்திய-மாநில அரசுகளின் நிதி உதவியுடன் அமைக்கப்பட உள்ளன. கன்னியாகுமரியில் புதிதாக அறிவியல் மையம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் ஒரு நாள் முழுவதும் மாணவர்கள் பார்வையிடும் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒரு நாளைக்கு 200 மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்படுவார்கள். 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு அறிவியல் தொடர்பான வகுப்புகள் நடத்தப்படும். இந்த சிறப்பு அனுமதிக்கு குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும். ஆர்வம் உள்ள பள்ளிக்கூடங்கள் முன்பதிவு செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, அவர் மாவட்ட அறிவியல் மையத்தை பார்வையிட்டார். அப்போது, நெல்லை மாவட்ட அறிவியல் மைய அலுவலர் குமார், கல்வி ஒருங்கிணைப்பாளர் மாரி லெனின் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்