செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே விரைவு மின்சார ரெயில்களை இயக்கக்கோரி மறியல் கூடுவாஞ்சேரியில் பரபரப்பு

செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே விரைவு மின்சார ரெயில்களை இயக்கக்கோரி கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடந்தது.;

Update: 2018-08-02 00:07 GMT
வண்டலூர்,

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் நேற்று காலை 8 மணி அளவில் தனியார் நிறுவனம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்லக்கூடியவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட பயணிகள் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரெயிலுக்காக காத்திருந்தனர். வழக்கமாக வரவேண்டிய அனைத்து மின்சார ரெயில்களும் தாமதமாக வந்தன. மேலும் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி இயக்கப்பட்ட விரைவு மின்சார ரெயில்கள் கடந்த சில நாட்களாக இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயிலையும், மற்றொரு தண்டவாளத்தில் விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த விரைவு ரெயிலையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

திடீரென பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரெயில் நிலைய அதிகாரி உடனே ரெயில்வே போலீசாருக்கும், கூடுவாஞ்சேரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பயணிகள் சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினார்கள். உடனே போலீசார் அங்கு இருந்த கூடுவாஞ்சேரி ரெயில் நிலைய அதிகாரியை அழைத்து பயணிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பயணிகள் அதிகாரிகளிடம் கடந்த சில நாட்களாக செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்பட்ட விரைவு மின்சார ரெயில்கள் அனைத்தும் இயக்கப்படவில்லை, மேலும் செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் சாதாரண மின்சார ரெயில்கள் அனைத்தும் தாமதமாக வருகிறது. இதனால் நாங்கள் குறித்த நேரத்திற்கு அலுவலகத்திற்கும், மாணவர்கள் தங்களது பள்ளி, கல்லூரிக்கும் போகமுடியவில்லை, மேலும் தினக்கூலி செய்யும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.

கோரிக்கை

எனவே நிறுத்தப்பட்ட விரைவு மின்சார ரெயில்களை உடனே இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு ரெயில் நிலைய அதிகாரி சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு உங்கள் கோரிக்கை தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து ½ மணி நேரம் நீடித்த ரெயில் மறியல் விலக்கி கொள்ளப்பட்டது.

இந்த நேரத்தில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரவேண்டிய ரெயில்களும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய ரெயில்களும் ஆங்காங்கே வழியிலே நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில்:-

பரங்கிமலை ரெயில் விபத்தில் 5 பேர் தடுப்பு சுவரில் மோதி உயிரிழந்தனர். இதன் காரணமாக தற்போது செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்பட்ட விரைவு மின்சார ரெயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை விரைவு மின்சார ரெயில்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்