மணல் குவாரி அமைக்க கோரி மாட்டு வண்டிகளில் வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்
மணல் குவாரி அமைக்க கோரி கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மாட்டு வண்டிகளில் வந்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் வானமாதேவி, விலங்கல்பட்டு, சன்னியாசிப்பேட்டை, எலந்தம்பட்டு, சிறுவத்தூர், எனதிரி மங்கலம், அக்கடவல்லி, ஆயிப்பேட்டை, மிராலூர், இளமங்கலம், திட்டக்குடி, கீழ் செருவாய் ஆகிய பகுதிகளில் மாட்டு வண்டி மணல் குவாரி அமைக்க வேண்டும் என்பது மாட்டு வண்டி தொழிலாளர்களின் கோரிக்கையாகும்.
இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், குவாரி அமைக்காமல் காலம் தாழ்த்தும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாட்டு வண்டிகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்போவதாக கடலூர் பகுதி மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி மாட்டு வண்டி தொழிலாளர்கள் நேற்று அதிகாலையிலேயே மாட்டு வண்டிகளை ஓட்டிக்கொண்டு கடலூர் புதிய கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கலெக்டர் அலுவலக சாலையில் இருந்து குண்டுசாலை வரையும், சுங்கச்சாலையிலும், கலெக்டர் அலுவலகத்தின் எதிரே பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள தடுப்பு அணையிலும் வரிசையாக மாட்டு வண்டிகளை நிறுத்தி இருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலக சாலையே சந்தை போல காட்சி அளித்தது.
பின்னர் மாட்டு வண்டியில் இருந்து மாடுகளை அவிழ்த்துக்கொண்டு வந்து புதிய கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் நிறுத்தினார்கள். தொடர்ந்து முற்றுகையிட்ட அவர்கள், தரையில் அமர்ந்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதன்பிறகு மாட்டு வண்டி தொழிலாளர் சங்க பிரதிநிதிகளிடம் சப்-கலெக்டர் சரயூ பேச்சுவார்த்தை நடத்தினார். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் பொதுப்பணித்துறை சார்பில் செயற்பொறியாளர் அசோகன், மாட்டு வண்டி தொழிலாளர்கள் தரப்பில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கருப்பையன், மாவட்ட தலைவர் பாஸ்கரன், மாட்டு வண்டி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் திருமுருகன், மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், நகர செயலாளர் பரணி, ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் வருகிற 4-ந்தேதி கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதனை மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.