நீலாங்கரை அருகே ஜோடியாக வருபவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
சென்னையை அடுத்த நீலாங்கரை கடற்கரை சாலையில் ஜோடியாக வருபவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணி கிழக்கு கடற்கரை சாலையில் ஜோடியாக வருபவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு சம்பவம் நடப்பதாக நீலாங்கரை போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து அடையாறு போலீஸ் துணை கமிஷனர் ஷேசாங்சாய் உத்தரவின்பேரில் நீலாங்கரை போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசலு, இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கடற்கரை பகுதியில் மாறுவேடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெட்டுவாங்கேணி கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த வெட்டுவாங்கேணியை சேர்ந்த சிவா(வயது 26), ராயபுரத்தை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ்(26) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் இருவரும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரைக்கு ஜோடியாக வருபவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சிவா, அவரது நண்பர் விக்னேஷ் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7½ பவுன் தங்க நகைகளும், ஒரு மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சிவா வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளில் ஏற்கனவே சிறைக்கு சென்றவர் என்பதும் விசாரணையில் தெரிந்தது. 2 பேரிடமும் நீலாங்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.