உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்து சிறை சென்று வந்த வியாபாரி கத்தியால் குத்திக்கொலை

கல்பாக்கம் அருகே 15 வயதான உறவுக்காரசிறுமிக்கு பாலியல் தொல்லை தந்து சிறைக்கு சென்று வந்த வியாபாரி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2018-08-01 23:40 GMT
கல்பாக்கம்,

கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினத்தை சேர்ந்தவர் திருமால் வேதநாராயணன் என்ற ஏசுதாஸ் (வயது 41). இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் இவர் 15 வயதான தனது நெருங்கிய உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று விட்டு வந்தார்.

குத்திக்கொலை

இந்த சம்பவம் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கு மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியது. தனது மகளுக்கு பாலியல் தொல்லை தந்த நெருங்கிய உறவினரான ஏசுதாஸ் இனி உயிரோடு இருக்கக்கூடாது, அவரைக் கொலை செய்ய வேண்டும் என்று தக்க தருணத்தை எதிர்பார்த்து ஆத்திரத்துடன் காத்து இருந்து இருக்கிறார்.

இந்த நிலையில் ஏசுதாஸ், நேற்று முன்தினம் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருப்பதை அறிந்து, சிறுமியின் தந்தை கையில் கத்தியுடன் சென்றார். அங்கு அவரை சரமாரியாக கத்தியால் குத்தி ரத்த வெள்ளத்தில் சாய்த்து விட்டு, தப்பினார்.

இதில் ஏசுதாஸ் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனிப்படை

இந்தப் படுகொலை குறித்து தகவல் அறிந்த சதுரங்கப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் விரைந்து சென்று ஏசுதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் படுகொலை குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் கொலையாளியை கைது செய்ய மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜு தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும் செய்திகள்