வேலூர் சம்பத் நகரில் 14 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பல்

வேலூர் சம்பத் நகரில் ஏற்பட்ட தீவிபத்தில் 14 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாயின. தீயணைப்பு வீரர்கள் 1½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Update: 2018-08-01 22:44 GMT
வேலூர்,

வேலூர் கோட்டை பின்புறம் அமைந்துள்ள சம்பத்நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தென்னங்கீற்றால் மேற்கூரை போடப்பட்ட ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் திடீரென சம்பத் நகரில் வசிக்கும் சரசு என்பவரின் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது.

அதனால் அதிர்ச்சி அடைந்த சரசு மற்றும் அவரின் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வந்து, அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களின் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். தென்னங்கீற்றுகள் பற்றி எரிந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. அந்த சமயம் பலத்த காற்று வீசியதால் மேலும் வேகமாக தீ எரிந்தது. தொடர்ந்து எரிந்த தீ காற்றின் காரணமாக அருகே உள்ள குடிசைகளிலும் பரவி எரியத்தொடங்கியது.

இதுகுறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வேலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் முரளி தலைமையில் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் வெங்கடாசலம், வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விநாயகம் அடங்கிய தீயணைப்பு வீரர்கள் 5 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீப்பிடித்து எரிந்த பகுதிக்கு செல்லும் பாதை குறுகலாக இருந்ததால் தீயணைப்பு வாகனங்கள் அருகே சென்று தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து காட்பாடியில் இருந்து கூடுதலாக ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது.

இதற்கிடையே தீப்பிடித்து எரிந்த வீட்டில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்று வெடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 3 இடங்களிலிருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் சுமார் 1½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அப்பகுதியை சேர்ந்த பாபு, காமாட்சி, ஜெயமேரி, சுதா, அனிதா உள்ளிட்ட 14 பேரின் குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்தன. வீட்டில் இருந்த பொருட்கள், சான்றிதழ் உள்ளிட்ட அனைத்தும் கருகி சாம்பலாயின.

இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் உதவி கலெக்டர் மேகராஜ், தாசில்தார் பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர். பின்னர் உதவி கலெக்டர் மேகராஜ், அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.5 ஆயிரம், வேட்டி, சேலை, அரிசி, மண்எண்ணெய் உள்ளிட்டவற்றை 14 பேரின் குடும்பத்துக்கும் வழங்கினார். தொடர்ந்து 4-வது மண்டல சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான ஊழியர்கள் தீவிபத்தில் எரிந்து சாலையில் கிடந்த பொருட்களை அப்புறப்படுத்தினர்.

இது தொடர்பாக வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவால் இந்த தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது குப்பையில் இருந்து வந்த தீப்பொறியால் விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்