அரசு விதித்த தடையால் நஷ்டம் பிளாஸ்டிக் வியாபாரி தற்கொலை நாக்பூரில் சோகம்
நாக்பூரில் பிளாஸ்டிக் வியாபாரி ஒருவர் அரசு விதித்த பிளாஸ்டிக் தடையால் நஷ்டம் ஏற்பட்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
நாக்பூர்.
நாக்பூரில் பிளாஸ்டிக் வியாபாரி ஒருவர் அரசு விதித்த பிளாஸ்டிக் தடையால் நஷ்டம் ஏற்பட்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
பிளாஸ்டிக் தடை
பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் ஆபத்தை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் மாதம் பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் தட்டுகள், கரண்டிகள், கைப்பைகள் போன்ற அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு மராட்டிய அரசு தடை விதித்து உத்தரவிட்டது.
இருப்பினும் பிளாஸ்டிக் வியாபாரிகள் சங்கம் இந்த தடையை எதிர்த்தது. இதனால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்று கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இருப்பினும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நீக்கப்படவில்லை.
தற்கொலை
இந்தநிலையில் நாக்பூர் நகர் பகுதியை சேர்ந்த பிரபல பிளாஸ்டிக் வியாபாரியான நரேஷ் தோட்லானி என்பவர் கணேஷ்பாத் பகுதியில் உள்ள காந்திசாகர் ஏரியில் குதித்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் நரேஷ் தோட்லானியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், அவர் அரசு விதித்த பிளாஸ்டிக் தடை காரணமாக வியாபாரத்தில் பெரும் நஷ்டம் அடைந்ததும், இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே மன வருத்தத்தில் இருந்ததும் தெரியவந்தது.
எனவே வியாபார நஷ்டத்தால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்தது.
பிளாஸ்டிக் வியாபாரி தற்கொலை சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.