அவினாசி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த மாணவன் சாவு
அவினாசி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.;
அவினாசி,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நஞ்சப்பகவுண்டன்புதூரை சேர்ந்தவர் சாமிநாதன்(வயது 30). இவருடைய மனைவி இந்திரா(28).
இவர்களின் மகன்கள் சிவா(8), சித்தார்த்(7). சாமிநாதனும், இந்திராவும் திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த கருவலூர் செங்காலிபாளையத்தில் தங்கியுள்ளனர். சாமிநாதன் அங்குள்ள ஒரு விசைத்தறி கூடத்தில் வேலை செய்து வரு கிறார். இவர்களின் மகன்கள் இருவரும் காடுவெட்டி பாளையத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கி, அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் சிவா 4-ம் வகுப்பு படித்துவருகிறார். சித்தார்த் 2-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெற்றோரை பார்க்க சித்தார்த் செங்காலிப்பாளையம் வந்தான்.
இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் சாமிநாதன் விசைத்தறி கூடத்துக்கு வேலைக்கு சென்றுவிட்டார். சிறிது நேரத்தில், தந்தையை பார்த்து விட்டு வருவதாக தனது தாயாரிடம் சித்தார்த் கூறிவிட்டு விசைத்தறி கூடத்துக்கு சென்றான்.
அப்போது அங்கிருந்த 10 அடி ஆழம் கொண்ட தரைமட்ட தொட்டி அருகே சித்தார்த் விளையாடிக்கொண்டிருந்தான்.
அப்போது அவன் எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துவிட்டான். இந்தநிலையில் வீட்டில் இருந்து சென்ற மகன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், தனது கணவரிடம் இந்திரா விசாரித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.
அப்போது, தண்ணீர் தொட்டி அருகே சித்தார்த்தின் காலணியும், அவன் விளையாடிக்கொண்டிருந்த சைக்கிள் டயரும் கிடந்துள்ளது. உடனே சந்தேகம் அடைந்த அவர்கள், தண்ணீர் தொட்டிக்குள் பார்த்த போது, சித்தார்த் நீரில் மூழ்கி இறந்துகிடந்தான். இதுபற்றி தகவல் அறிந்த அவினாசி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், விளையாடிக்கொண்டிருந்த சித்தார்த் எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் விழுந்து, நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்ததும் தெரியவந்தது.
இதைதொடர்ந்து சித்தார்த்தின் உடலை தொட்டிக்குள் இருந்து வெளியே எடுத்தனர். அவனது உடலை பார்த்து பெற்றோரும், அவருடைய உறவினர்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
பின்னர் சித்தார்த்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.