மானபங்க வழக்கை ரத்து செய்யக்கோரி நெஸ் வாடியா மனு நடிகை பிரீத்தி ஜிந்தா பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
மானபங்க வழக்கை ரத்து செய்யக் கோரி தொழில் அதிபர் நெஸ் வாடியா தொடர்ந்த வழக்கில், நடிகை பிரீத்தி ஜிந்தா பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
மும்பை,
மானபங்க வழக்கை ரத்து செய்யக் கோரி தொழில் அதிபர் நெஸ் வாடியா தொடர்ந்த வழக்கில், நடிகை பிரீத்தி ஜிந்தா பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வழக்குப்பதிவு
கடந்த 2014-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களாக தொழில் அதிபர் நெஸ் வாடியாவும், இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தாவும் இருந்தனர்.
அப்போது மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த தங்களது அணியின் போட்டியை அவர்கள் இருவரும் ஒன்றாக கண்டுகளித்தனர்.
அப்போது நடிகை பிரீத்தி ஜிந்தாவை, நெஸ் வாடியா மானபங்கம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து பிரீத்தி ஜிந்தா போலீசில் புகார் கொடுத்தார்.
இதன்பேரில் போலீசார் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் அவர் மீது மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
குற்றப்பத்திரிகை
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போலீசார் நெஸ் வாடியா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் தொழில் அதிபர் நெஸ் வாடியா மும்பை ஐகோர்ட்டில் தன் மீது பிரீத்தி ஜிந்தா கொடுத்த மானபங்க வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.
இதில் அவர் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தன்மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், மேலும் அன்று நடந்த சம்பவம் புரிதல் இன்மையால் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இவரின் மனு குறித்து பதில் அளிக்குமாறு நடிகை பிரீத்தி ஜிந்தாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.