வருமான சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களை கள ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமனம்: திருப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவு
திருமண உதவித்தொகைக்கு வருமான சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மீது கள ஆய்வு செய்ய அதிகாரிகளை நியமனம் செய்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர்,
சமூக நலத்துறையின் கீழ் வழங்கப்படும் திருமண உதவித்தொகையை தகுதியில்லாத நபர்கள் பெறுவதை தவிர்க்கும் வகையில் வருமான சான்றிதழ் பெறும்போது கள அலுவலர்கள் என்ற முறையில் கிராம நிர்வாக அதிகாரிகள் பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவ்வாறு விசாரணை நடத்தும்போது ஊதியச்சான்று, மனுதாரரின் குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தில் இருந்து பெறப்படும் வருமானம், வருமான வரி தாக்கல் செய்துள்ள விவரம், வாடகை மூலம் பெறும் வருமானம், இதர வருமானம் ஆகிய விவரங்களை பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் திருமண உதவித்தொகை பெற கிராம நிர்வாக அதிகாரிகளால் வழங்கப்பட்ட வருமான சான்றிதழ்களை ஆய்வு செய்ய சப்-கலெக்டர், துணை கலெக்டர் அந்தஸ்தில் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் திருப்பூர் சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார், தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் தாராபுரம் சப்-கலெக்டர் கிரேஸ் பச்சாவு, உடுமலை தாசில்தார் அலுவலகத்தில் உடுமலை ஆர்.டி.ஓ. அசோகன், திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராகவேந்திரன், அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட உதவி ஆணையாளர்(கலால்) சக்திவேலு ஆகியோர் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோல் காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி முருகன், மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி சாந்தாதேவி, பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அதிகாரி பெரியதம்பி, ஊத்துக்குளி தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) ரவி ஆகியோர் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகள் சமூக நலத்துறையின் கீழ் திருமண உதவித்தொகை பெற வருமான சான்றிதழ்கள் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது கள ஆய்வு செய்து தவறான வருமான சான்று வழங்கப்பட்டு இருந்தால் அதுகுறித்த அறிக்கையை வருகிற 10-ந் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.