சாக்கடை கால்வாயை தூர்வாரக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
வீராணம் அருகே சாக்கடை கால்வாயை தூர்வாரக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சேலம்,
சேலம் வீராணம் அருகே உள்ள சின்னனூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாக்கடை கால்வாயை தூர்வாரப்படாததால் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. மேலும் மழை பெய்யும் போது வீடுகளுக்குள் மழை நீருடன் கழிவுநீர் புகுந்து விடுவதாக கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் அவதியுற்று வந்தனர். சாக்கடை கால்வாயை தூர்வாரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை பொதுமக்கள் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பலர் நேற்று வலசையூர் மெயின் ரோட்டிற்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென அங்கு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பர பரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வீராணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரத ராஜன் தலைமையில் போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கழிவுநீர் தெருக்களில் செல்லாதவாறு உடனடியாக கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.