பெங்களூருவுக்கு இணைப்பு ரெயிலாக இயக்கப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தனி ரெயிலாக ஓட தொடங்கியது

பெங்களூருவுக்கு இணைப்பு ரெயிலாக இயக்கப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், தனி ரெயிலாக நேற்று முதல் ஓட தொடங்கியது. சரியான நேரத்துக்கு புறப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2018-08-01 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் சென்னைக்கு இயக்கப்படும் ரெயிலாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தினமும் மாலை 5.20 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு 5.40 மணிக்கு வந்து சேரும். பின்னர் 5.45 மணிக்கு சென்னைக்கு இந்த ரெயில் புறப்பட்டு செல்வது வழக்கம். சரியான நேரத்துக்கு புறப்பட்டு, சரியான நேரத்துக்கு சென்றடைவதால் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.

இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக இந்த ரெயில் தினமும் காலை கன்னியாகுமரியை சென்றடைந்ததும், அங்கிருந்து பெங்களூருவுக்கு ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலாக புறப்பட்டு செல்லும். ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி வந்த பிறகு, கன்னியாகுமரி எக்ஸ்பிரசாக சென்னைக்கு புறப்பட்டு செல்லும்.

தனி ரெயிலாக இயக்கப்பட்டு வந்த போது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சரியான நேரத்துக்கு இயக்கப்பட்டது. இணைப்பு ரெயிலாக இயக்கப்பட்ட போது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தொடர்ந்து தாமதமாக இயக்கப்பட்டு வந்தது. அதற்கு காரணம், ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்தால், கன்னியாகுமரி எக்ஸ்பிரசும் தாமதமாக இயக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் மிகுந்த சிரமத்துக்கும், அவதிக்கும் ஆளாகினர்.

எனவே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை முன்பு போலவே தனி ரெயிலாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் ரெயில்வே துறை அதிகாரிகளிடம் அடிக்கடி கோரிக்கை வைத்ததோடு, பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர்.

இந்தநிலையில் பயணிகள் கோரிக்கையை ஏற்று ஆகஸ்டு மாதம் 1-ந் தேதியான நேற்று முதல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை தனி ரெயிலாக இயக்க ரெயில்வே துறை முடிவு செய்தது. அதன்படி நேற்று இந்த ரெயில், மாலை 5.20 மணிக்கு ரெயில்வே அட்டவணைப்படி சரியான நேரத்துக்கு கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை 5.40 மணிக்கு வந்தடைந்து. மீண்டும் 5.45 மணிக்கு புறப்பட்டு சென்றது. வழக்கமாக நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் வந்து செல்லும். நேற்று 3-வது பிளாட்பாரத்தின் வழியாக வந்து சென்றது. இதனால் ரெயிலில் பயணம் செய்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இனிமேல் இந்த ரெயில் சரியான நேரத்துக்கு புறப்பட்டு, சரியான நேரத்துக்கு சென்னையை சென்றடையும் என்பதால் மீண்டும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் தனித்துவம் பெறும் என்றும் ரெயில் பயணிகள் கூறினர்.

இதுதொடர்பாக நாகர்கோவில் ரெயில் நிலைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “இன்று (நேற்று) முதல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தனி ரெயிலாக இயக்கப்படுகிறது. இனிமேல் பெங்களூரு-ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் இணைப்பு ரெயிலாக இந்த ரெயில் இயக்கப்படாது. அதேநேரத்தில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சென்னையை சென்றடைந்ததும், அங்கிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு செல்லும். தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்ததும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலாக புறப்படும். இதனால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதமாக இயக்கப்படாது. சரியான நேரத்துக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, சரியான நேரத்துக்கு சென்னையை சென்றடையும். தற்போது இந்த ரெயிலுக்கான நேரமாற்றம் பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை“ என்றார்.

குமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்க தலைவர் ஸ்ரீராம் கூறுகையில், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தனி ரெயிலாக இயக்கப்படுவது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகும். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனின் முழு முயற்சியால் தான் இந்த ரெயில் மீண்டும் தனி ரெயிலாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலை பெங்களூருவுக்கு ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்கப்பட்டதில் இருந்து மாதத்துக்கு 20 நாட்களுக்கு மேல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தாமதமாகத்தான் புறப்பட்டு சென்றுள்ளது.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை சென்றதும் அங்கிருந்து தூத்துக்குடிக்கு இயக்க ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது. வருகிற 15-ந் தேதி முதல் இந்த ரெயிலுக்கான புதிய கால அட்டவணை வெளியிடப்பட உள்ளது. மேலும் இந்த ரெயிலுக்கான வேகமும் அதிகரிக்கப்பட இருக்கிறது என்றார். 

மேலும் செய்திகள்