கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள்
சேலத்தில் நேற்று அரசு டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
சேலம்,
தமிழகத்தில் பணியாற்றி வரும் டாக்டர்களுக்கு, மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அனைத்து அரசு டாக்டர்கள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். அதன்படி முதல் கட்டமாக நேற்று தமிழகம் முழுவதும் டாக்டர்கள் சட்டையில் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் அனைத்து டாக்டர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் டாக்டர்களும் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து அரசு டாக்டர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் கூறியதாவது:-
அரசு டாக்டர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறோம். எனவே எங்களது கோரிக்கை குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். இதற்காக முதல் கட்டமாக கோரிக்கை அடங்கிய அட்டை (பேட்ஜ்) அணிந்து பணியில் ஈடுபட்டு உள்ளோம்.
அடுத்த கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்த உள்ளோம். தொடர்ந்து தலைமை செயலகம் நோக்கி பேரணி நடத்தப்படும். அதன் பிறகும் கோரிக்கை நிறைவேற்ற வில்லை என்றால் இறுதியாக ஒரு நாள் அரசு டாக்டர்கள் அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.