துப்புரவு பெண் தொழிலாளி எரித்து கொலை?

பூலாம்பட்டி அருகே துப்புரவு பெண் தொழிலாளி தீயில் கருகி பலியானார். அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-08-01 22:00 GMT
எடப்பாடி,



சேலம் மாவட்டம் பூலாம்பட்டி அருகே உள்ள சித்தூர் பனங்காடு காலனியை சேர்ந்தவர் ராமர். இவருடைய மனைவி வள்ளி(வயது 45). இவர் சித்தூர் ஊராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். வள்ளிக்கு குழந்தை இல்லாததால் அவருடைய கணவர் ராமர், ஜெயலட்சுமி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

அதே பகுதியில் வசித்து வந்த ராமரின் தம்பி நாகராஜ்(49) தனது மனைவி இறந்த பிறகு கண்பார்வையற்ற தனது மகள் வனிதா(30), மகன் மணி(30) ஆகியோருடன் அண்ணன் வீட்டில் வசித்து வந்தார். இரு குடும்பத்தினரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.


இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் உள்ள வராண்டாவில் கட்டிலில் படுத்திருந்த வள்ளி மீது திடீரென்று தீப்பிடித்து உள்ளது. தீ மளமளவென எரிந்ததால் அவர் அலறினார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு வீட்டின் ஒரு அறையில் படுத்து இருந்த நாகராஜூம், அவரது மகன் மணியும் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். வீட்டின் மற்றொரு அறையில் படுத்து இருந்த ராமர் தனது மற்றொரு மனைவி, குழந்தைகளுடன் வெளியே ஓடி வந்தார்.

கட்டில் அருகே படுத்திருந்த கண்பார்வையற்ற வனிதாவை நாகராஜ் வெளியே அழைத்து சென்றார். கட்டிலில் வள்ளி மீது பற்றிய எரிந்த தீயை அண்ணன், தம்பி இருவரும் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இருப்பினும் தீயில் கருகிய வள்ளி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், பூலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தீயில் கருகி பலியான வள்ளியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வள்ளி எரித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் வள்ளியின் கணவர் குடும்பத்தினரிடமும், அவரது கொழுந்தனார் நாகராஜ் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினார்கள். சம்பவம் நடந்த இடத்தில் வள்ளி கட்டிலில் படுத்து இருந்தார். அவர் அருகே தரையில் படுத்து இருந்த கண்பார்வையற்ற வனிதாவுக்கு இந்த சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரியுமா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்