திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவில் தேர் வெள்ளோட்டம்

திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கசாமி கோவில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.;

Update: 2018-08-01 22:30 GMT
திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் மகாலிங்கசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூச உற்சவம் மற்றும் ஆடிப்பூர உற்சவத்தின்போது தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

இதில் ஆடிப்பூர உற்சவத்தின்போது ஆடிப்பூரத்தம்மன் மட்டும் தனித்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

தைப்பூச உற்சவத்தில் கோவிலில் உள்ள 5 தேர்களும் வலம் வரும். கடந்த 1936-ம் ஆண்டுக்கு பிறகு தைப்பூச தேரோட்டம் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டது. இதனால் கோவிலுக்கு சொந்தமான 5 தேர்களும் சிதிலமடைந்தன.

இதையடுத்து 80 ஆண்டுகளுக்கு பிறகு 5 தேர்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு தைப்பூச விழா தேரோட்டம் நடந்தது. இதன் பின்னர் ஆடிப்பூர உற்சவ தேரோட்டமும் நடந்தது.

இந்த நிலையில் ஆடிப்பூர உற்சவத்துக்கு என இந்த ஆண்டு தனியாக புதிய தேர் செய்ய திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உத்தரவிட்டார். அதன்படி பக்தர்களின் பொருள் உதவியுடன் 45 அடி உயரம், 15 அடி அகலத்தில் ஆடிப்பூர உற்சவத்துக்கு தனியாக தேர் வடிவமைக்கப்பட்டது.

இந்த தேரில் 200 கிலோ எடை கொண்ட 4 இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேரின் மொத்த எடை 4 டன் ஆகும். இதில் திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

வருகிற 12-ந் தேதி ஆடிப்பூர உற்சவ தேரோட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்