திண்டுக்கல்லில் கொடூரம்: இளம்பெண் ஆட்டோவில் கடத்தி கற்பழிப்பு
திண்டுக்கல்லில் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி கற்பழித்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் பகுதியை சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவர் கரூர் சாலையில் உள்ள தனியார் மில்லில் வேலைபார்த்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மதியம் காய்கறி வாங்குவதற்காக திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்கு வந்தார். பின்னர், காய்கறிகளை வாங்கிக்கொண்டு கச்சேரி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கனமழை பெய்ய தொடங்கியது.
இதனால், அவர் நனைந்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பின்னால் ஒரு ஆட்டோ வந்தது. அதில் இருந்த வாலிபர்கள், ஆட்டோவில் ஏறுங்கள், வீட்டில் கொண்டு விடுகிறோம் என்று கூறினர். இதை நம்பிய அந்த இளம்பெண்ணும் ஆட்டோவில் ஏறினார். ஆனால், அவர்கள் இளம்பெண்ணின் வீட்டுக்கு செல்வது போல கரூர் சாலைக்கு சென்றுள்ளனர்.
அங்குள்ள ஒரு குளத்தின் மறைவான பகுதிக்கு இளம்பெண்ணை கொண்டு சென்று 4 பேரும் சேர்ந்து கொடூரமாக கற்பழித்துள்ளனர். இருப்பினும், ஆசை தீராத அந்த வாலிபர்கள் நேற்று மாலை வரை மறைவான பகுதியிலேயே வைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர். இதில், மயக்கம் அடைந்த இளம்பெண்ணை அங்குள்ள தனியார் கல்லூரி அருகே இருந்த மற்றொரு குளத்தில் போட்டுவிட்டு தப்பி இருக்கின்றனர்.
இதற்கிடையே, மார்க்கெட்டுக்கு சென்ற மகள் நேற்றுமுன்தினம் இரவு வரை வராததால் பெற்றோர் அவருடைய போட்டோவை காட்டி பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். இருப்பினும் கண்டுபிடிக்க முடியாததால் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசாரும் தேடி வந்தனர்.
இந்தநிலையில், நேற்று மாலை குளத்தில் இளம்பெண் மயங்கி கிடப்பதாக அவருடைய பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்று பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவருடைய உடலில் நகக்கீறல்கள் மற்றும் காயங்கள் இருந்தன. உடனே, அவர் மீது தண்ணீரை தெளித்து எழுப்பி கேட்டபோது, 4 பேர் சேர்ந்து தன்னை கடத்தி வந்து கற்பழித்ததாக கூறி அழுதார்.
இதையடுத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், இளம்பெண் கற்பழிக்கப்பட்டதை அறிந்த டாக்டர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்பேரில், பெற்றோர் நேற்று இரவு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரையும் தாலுகா போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.