பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் தீக்குளித்த 10-ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி சாவு
பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் மனம் உடைந்த 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவொற்றியூர்,
எண்ணூர் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ஜெயகாந்தன். டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மகள் ஹரிணி(வயது 15). இவர், திருவொற்றியூர் ஜோதிநகரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று ஹரிணி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதனால் அவரை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த மாணவி, வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.
இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி ஹரிணி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். லாரி டிரைவர். இவருடைய மனைவி வைதேகி(23). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
நேற்றுமுன்தினம் மாலை வைதேகி, தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வைதேகி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வைதேகியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.