திருவொற்றியூரில் நள்ளிரவில் பஸ் நிலையத்தில் தவித்த வடமாநில பெண்
திருவொற்றியூர் பஸ் நிலையத்தில் நள்ளிரவில் தவித்த வடமாநில பெண்ணை மீட்டு குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.;
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நள்ளிரவு 12.30 மணியளவில் திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்தபோது, போலீசாரின் கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்ல தெரியவில்லை.
இதையடுத்து அந்த பெண்ணை, அருகில் உள்ள தொண்டு நிறுவனத்தில் தங்க வைத்த போலீசார், நேற்று காலை தொண்டு நிறுவன தலைவர் மரியசூசை உதவியுடன் அந்த பெண்ணை திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் பகுதிக்கு அழைத்துச்சென்று அங்கு வசிக்கும் வடமாநிலத்தினரிடம் பேச வைத்தனர்.
அதில் அந்த பெண்ணின் பெயர் பூஜா (வயது 22) என்பதும், பீகார் மாநிலத்தை சேர்ந்த அவர், தனது கணவர் அனோஜ் என்பவருடன் மீஞ்சூர் அருகே உள்ள வீச்சூர் சாமியார் மடத்தில் தங்கி இருப்பதாகவும், உறவினர் வீட்டுக்கு வந்த இடத்தில் வழிதவறி திருவொற்றியூர் வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த பெண் பூஜாவை, போலீசாரும், தொண்டு நிறுவனத்தினரும் சேர்ந்து அவர் கூறிய இடத்துக்கு அழைத்துச்சென்று அவரது குடும்பத்தினருடன் ஒப்படைத்தனர்.