உயிருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் தம்பதியினர் தஞ்சம்

உயிருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் தம்பதியினர் தஞ்சம் அடைந்தனர்.

Update: 2018-08-01 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் ஒக்கநாடு கீழையூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் அருண்குமார் (வயது26). பி.பி.ஏ. படித்து முடித்துள்ள இவர் சிங்கப்பூரில் சில ஆண்டுகள் வேலை செய்துவிட்டு தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

காவாராப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஞானசேகரன் மகள் சிந்து(21). இவர் பி.டெக். படித்து முடித்துள்ளார். அருண்குமாரும், சிந்துவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த விஷயம் இருவருடைய பெற்றோருக்கும் தெரியவந்தது. இந்த காதலுக்கு சிந்து வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. அருண்குமாரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சிந்து பிடிவாதமாக இருந்ததால் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடைபெற்றது.

இந்த தகவலை தனது காதலன் அருண்குமாரிடம் சிந்து கூறி, உன்னை விட்டு என்னால் பிரிந்து இருக்க முடியாது என்று கதறி அழுதார். இதனால் சிந்துவை அழைத்து கொண்டு கடலூருக்கு சென்ற அருண்குமார் அங்கு பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் தம்பதியினர் நேற்று தஞ்சம் அடைந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட அவர், உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இது குறித்து சிந்து கூறும்போது, நான் பள்ளியில் படிக்கும் போதே அருண்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தோம். அருண்குமாரை காதலிப்பதாக எனது தந்தையிடம் நான் கூறியபோது, கத்தியால் குத்தியோ அல்லது விஷம் குடித்தோ தற்கொலை செய்து கொள் என்று கொடுமைப்படுத்தினார். நாங்கள் திருமணம் செய்து கொண்ட தகவல் தெரிந்தவுடன் அருண்குமாரின் வீட்டை எனது தந்தை அடித்து நொறுக்கியதுடன் அங்குள்ளவர்களை மிரட்டினார். மேலும் நான் காணாமல் போய்விட்டதாக ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார். எனது தந்தையால் எனக்கும், அருண் குமாரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு கேட்டு புகார் அளித்துள்ளோம் என்றார். 

மேலும் செய்திகள்