பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் மினிவேன்-ஆட்டோ டிரைவர்களுக்கு புதிய கட்டுப்பாடு
பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் மினிவேன்-ஆட்டோ டிரைவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.;
திண்டுக்கல்,
திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் போலீசார் சார்பில் ஆட்டோ டிரைவர்கள், மினிவேன் (டாடா மேஜிக்) உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. திண்டுக்கல் வர்த்தகர்கள் சங்க கட்டிடத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பேசும்போது கூறியதாவது:-
சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதன்மூலம், விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகள் வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும், இயற்கை மரணத்தை விட விபத்துகளில் ஏற்படும் பலி எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
அனைவருக்கும் தனிமனித ஒழுக்கம் அவசியம். சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். ஆட்டோ டிரைவர்கள் மிகுந்த கவனத்துடன் பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும். தாங்கள் ஏற்றி செல்லும் பள்ளி மாணவர்களின் விவரங்களை தலைமை ஆசிரியரிடம் காண்பித்து அனுமதி பெற்ற பின்னரே அவர்களை அழைத்து வர வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் பேசும்போது, ‘மினிவேன்களுக்கு (டாடா மேஜிக்) சுற்றுலா போன்று மொத்தமாக பயணிகளை ஏற்றி செல்லவே உரிமம் வழங்கப்படுகிறது. ஆனால், பஸ்களில் பயணிகளை ஏற்றுவது போல டிக்கெட் கொடுத்து மாணவர் களை ஆங்காங்கே ஏற்றி இறக்குகின்றனர். வருகிற 6-ந்தேதி வரை ஏற்றிக்கொள்ளுங்கள். அதன்பிறகு பள்ளி தலைமை ஆசிரியர்களின் அனுமதி சான்று பெற்றே மாணவர்களை ஏற்ற வேண்டும். இல்லையெனில் மினி வேன்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.
இந்த கருத்தரங்கில், 300-க் கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள், மினிவேன் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.