திறந்தவெளியில் நிறுத்தப்படுகிற பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ்
கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில், திறந்தவெளியில் பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்படுவதால் உபகரணங்கள் பழுதடையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கம்பம்,
சிசு மரண விகிதத்தை குறைக்கும் வகையில், பச்சிளம் குழந்தைகளுக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு அவசர கால ஆம்புலன்ஸ் சேவை கடந்த 2015-ம் ஆண்டு தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, 108 ஆம்புலன்சின் ஒரு பிரிவாக உள்ளது.
இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் இன்குபேட்டர், வால்யூம் இன்ப்யூஷன் பம்ப், வென்டிலேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர், பல்ஸ் ஆக்சிமீட்டர், மல்டி பாராமீட்டர் போன்ற உபகரணங்கள் இருக்கின்றன. தேனி மாவட்டத்தை பொறுத்தவரையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கம்பம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் மட்டுமே இந்த வாகனங்கள் உள்ளன.
பிறந்து 28 நாட்களுக்கு உட்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு தொடர் சிகிச்சை, உயர்தர சிகிச்சை அளிப்பதற்காக இந்த வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு மாதத்துக்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள், இந்த வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறுகின்றனர்.
பல்வேறு உபகரணங்களுடன் உள்ள இந்த ஆம்புலன்ஸ் வாகனம், கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் திறந்தவெளியில் நிறுத்தப்பட்டு வருகிறது. வெயிலில் காய்வதும், மழையில் நனைவதுமாக இந்த வாகனத்தின் அவலநிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலில், ஆம்புலன்சில் உள்ள உபகரணங்கள் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படுகிற பச்சிளம் குழந்தைகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் நிலவுகிறது.
இதுபற்றி கம்பம் அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறும்போது, சுட்டெரிக்கும் வெயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்படுகிறது. இதனால் உபகரணங்கள் பழுதடைய வாய்ப்பு உள்ளது. எனவே ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்துவதற்கு தனியாக நிழற்குடை அமைக்க வேண்டும் என்றார்.