எருமப்பட்டியில் 148 மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர்

எருமப்பட்டியில் நடந்த விழாவில் 148 மகளிருக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர்களை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

Update: 2018-08-01 22:30 GMT
எருமப்பட்டி,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் எருமப்பட்டி புதிய பஸ் நிலையம் அருகில் வருவாய் துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.

விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு 541 பயனாளிகளுக்கு ரூ.68.84 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், 148 உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர்களையும் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 7 ஆண்டுகளில் நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, தார்சாலைகள் அமைத்தல், வடிகால் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கி வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் சாலைமேம்பாடு செய்ய ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கி வைக்கப்படும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் சிறப்பான செயல்பாடுகளால் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு 2-வது இடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் தங்கமணி பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) துரை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பர்ஹத் பேகம், நாமக்கல்-சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த ஆவின் தலைவர் சின்னுசாமி, வருவாய் தாசில்தார் பிரகாசம், எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கமலகண்ணன், தனம், பேரூராட்சி செயல் அலுவலர் இளங்கோ, அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் வருதராஜன், எருமப்பட்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் பாலுசாமி, எருமப்பட்டி முன்னாள் ஒன்றிய தலைவர் பத்மநாபன், அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் சீனிவாசன் உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்