மன்னர் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

கல்லூரிக்கு வந்த மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-08-01 22:45 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில், புதுக்கோட்டை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் 8 மணிக்கு கல்லூரிக்கு வந்த மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரி முன்பு உள்ள மதுரை நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும். கழிவறையை சுத்தம் செய்து புதிய கழிவறைகள் கட்ட வேண்டும். கல்லூரி வளாகத்தில் உள்ள குப்பைகளை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வகுப்பறைகளில் உள்ள மின்விசிறி, விளக்குகள், கதவுகள், ஜன்னல்களை சரிசெய்ய வேண்டும் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து தங்களது கோரிக்கைளை மனுவாக எழுதி கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் கொடுத்து விட்டு, வகுப்புக்கு சென்றனர். 

மேலும் செய்திகள்