கயத்தாறில் மயில்கள் விஷம் வைத்து சாகடிப்பு?
கயத்தாறில் 4 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அவைகள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டனவா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கயத்தாறு,
கயத்தாறில் 4 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அவைகள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டனவா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பயிர்களை சேதப்படுத்தும் மயில்கள்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான மயில்கள் வசித்து வருகின்றன. இவைகள் அங்குள்ள குளங்களில் உள்ள சீமை கருவேல மரங்கள், புதர் செடிகளில் வசித்து வருகின்றன. தற்போது குளங்களில் தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால், மயில்களின் வாழ்விடம் குறைந்து வருகிறது. இதற்கிடையே விளைநிலங்களில் உள்ள பயிர்களை மயில்கள் தின்று சேதப்படுத்துவதால், சிலர் அவற்றை விஷம் வைத்து சாகடிக்கும் துயரமும் நிகழ்கிறது.
கயத்தாறு சாய்படைதாங்கி குளத்தில் தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த குளத்தின் அருகில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. அவற்றில் சோளம், கம்பு, கேழ்வரகு போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். அவற்றில் பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன.
4 மயில்கள் சாவு
இந்த நிலையில் கயத்தாறு சாய்படைதாங்கி குளத்தில் நேற்று காலையில் 6 மயில்கள் மர்மமான முறையில் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடியவாறு கிடந்தன. அந்த வழியாக நடைப்பயிற்சிக்கு சென்றவர்கள், அந்த மயில்களுக்கு தண்ணீர் வழங்கி, முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் உயிர் பிழைத்த 2 மயில்கள் பறந்து சென்றன. மற்ற 4 மயில்களும் இறந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், குருமலை வனச்சரகர் சீதாராமன், வன அலுவலர்கள் ஆனந்த், மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்த மயில்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கயத்தாறு கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே மயில்கள் எப்படி இறந்தன? என்பது குறித்து தெரிய வரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் பயிர்களை சேதப்படுத்துவதால் மயில்களுக்கு யாரேனும் விஷம் வைத்தனரா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.