மலை அடிவார பகுதியில் கும்கி யானையை அழைத்து சென்ற வனத்துறையினர்
தேவாரம் மலை அடிவார பகுதியில் காட்டுயானையின் வழித்தடத்தில் முன்னோட்டமாக மாரியப்பன் என்ற கும்கி யானையை வனத்துறையினர் அழைத்து சென்றனர்.
தேவாரம்,
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக காட்டுயானை ஒன்று விளைநிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்து வருகிறது. மேலும் விவசாயிகள், தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் உள்பட 7 பேர் அந்த யானை தாக்கி பலியாகி உள்ளனர். இந்த யானையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனை பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு கோவை மாவட்டம், டாப்சிலிப் என்னுமிடத்தில் இருந்து வனத்துறை மூலம் மாரியப்பன், கலீம் என்ற 2 கும்கி யானைகள் தேவாரத்துக்கு அழைத்து வரப்பட்டன. இந்த கும்கி யானைகள் அந்த பகுதியில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் தங்க வைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. கும்கி யானைகளை நாளை (வெள்ளிக்கிழமை) வனப்பகுதிக்குள் அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கும்கி யானைகள் வருகையை தொடர்ந்து சிறப்பு பயிற்சி பெற்ற வேட்டை தடுப்பு காவலர்கள் வனப்பகுதிக்குள் சென்று காட்டுயானையின் வழித்தடத்தை ஆய்வு செய்தனர். நேற்று காலை 10 மணியளவில் உத்தமபாளையம் வன அலுவலர் ஜீவனா தலைமையில் வனத்துறையினர் தேவாரத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மாரியப்பன் என்ற கும்கி யானையை அழைத்து கொண்டு தேவாரம் மலையடிவார பகுதிக்கு சென்றனர். அங்கு காட்டுயானை வந்து சென்ற வழித்தடத்தில் கும்கி யானையை முன்னோட்டமாக அழைத்து சென்றனர். பின்பு அவர்கள் மதியம் 2 மணிக்கு தேவாரத்துக்கு திரும்பி வந்தனர்.
இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்ட போது, காட்டுயானை வந்து சென்ற வழித்தடத்தில் முன்னோட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அடர்ந்த வனப்பகுதி மற்றும் உயரமான மலைப்பகுதிகளுக்கு கும்கி யானைகளை அழைத்து செல்வது சிரமம் ஏற்படும் என்பதால் மலை அடிவார பகுதிகளில் இருந்து பணிகளை தொடங்க உள்ளோம். கும்கி யானைகள் வந்து இருப்பதால், இந்த பகுதிகளில் கடந்த 3 நாட்களாக காட்டுயானை விளைநிலங்களுக்குள் வராமல் உள்ளது. தற்போது வனப்பகுதியில் அதிக காற்று வீசி வருகிறது. இதனால் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்றனர்.