திருச்செந்தூரில் ஓரிரு வாரங்களில் அடிக்கல் நாட்டுவிழா: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்ட அரசாணை வெளியீடு
‘‘டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. எனவே, திருச்செந்தூரில் இன்னும் ஓரிரு வாரங்களில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெறும்’’ என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
திருச்செந்தூர்,
‘‘டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. எனவே, திருச்செந்தூரில் இன்னும் ஓரிரு வாரங்களில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெறும்’’ என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம்திருச்செந்தூரில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
நாட்டுக்கு உழைத்த நல்லவர்களையும், தியாக சீலர்களையும் தமிழக அரசு மதித்து கவுரவித்து வருகிறது. அ.தி.மு.க.வின் ஆட்சியில் 68 தலைவர்களுக்கு மணிமண்டபங்களும், 4 நினைவு சின்னங்களும், 4 நினைவு மண்டபங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
அந்த வகையில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற தூத்துக்குடி மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22–ந் தேதி தூத்துக்குடியில் நடந்த விழாவில், திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அரசாணை வெளியீடுஇதைத்தொடர்ந்து திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான அரசாணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அனுமதியை பெற்று, திருச்செந்தூரில் இன்னும் ஓரிரு வாரங்களில் மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெறும்.
இதில் அமைச்சர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிப்பார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.