எடக்காடு கூட்டுறவு தொழிற்சாலைக்கு பச்சை தேயிலை வினியோகித்த விவசாயிகள் 5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது

கூடுதல் விலை நிர்ணயம் செய்யக்கோரி நடந்த 5 நாள் போராட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து, எடக்காடு கூட்டுறவு தொழிற்சாலைக்கு விவசாயிகள் பச்சை தேயிலையை வினியோகித்தனர்.

Update: 2018-08-01 22:15 GMT

மஞ்சூர்,

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே எடக்காட்டில் குந்தா கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இவர்கள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைக்கு வினியோகித்து வருகின்றனர். மாதந்தோறும் விலை நிர்ணயிக்கப்படுவதின்படி கடந்த ஜூன் மாதம் வினியோகித்த பச்சை தேயிலைக்கு தொழிற்சாலை நிர்வாகம் கிலோவுக்கு ரூ.8 என விலை நிர்ணயித்தது. இந்த விலை மிக குறைவாக உள்ளதால், கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி முதற்கட்டமாக கடந்த மாதம் 16 மற்றும் 17–ந் தேதிகளில் தொழிற்சாலைக்கு பச்சை தேயிலை வழங்குவதை நிறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை.

அதனை தொடர்ந்து 2–ம் கட்டமாக கடந்த 27–ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 5 நாட்கள் தொழிற்சாலைக்கு பச்சை தேயிலை வழங்குவதை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இதனால் அந்த 5 நாட்களில் ரூ.50 லட்சம் தேயிலை வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

தற்போது போராட்டம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, விவசாயிகள் மீண்டும் நேற்று தொழிற்சாலைக்கு பச்சை தேயிலையை வினியோகம் செய்தனர். அதன்படி ஒரே நாளில் மொத்தம் 15 ஆயிரத்து 700 கிலோ பச்சை தேயிலை வினியோகிக்கப்பட்டது. ஆனால் 2 கட்ட போராட்டங்கள் நிறைவடைந்தும், கூடுதலாக விலை நிர்ணயம் செய்வது குறித்து தொழிற்சாலை தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்