விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் பிரமுகர் கொலையில் மகன் கைது

பொம்மிடி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் பிரமுகர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அவரது மகனை போலீசார் நேற்று கைது செய்தனர்.;

Update: 2018-08-01 22:30 GMT
பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பொம்மிடியை அடுத்த கும்பாரஅள்ளியை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மனைவி சாந்தி (வயது 47). விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட மகளிரணி துணைச்செயலாளராக இருந்தார். மாதையன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு அஸ்வினி என்ற மகளும், நவீன்குமார் (23) என்ற மகனும் உள்ளனர். அஸ்வினிக்கு திருமணமாகி புதுப்பட்டியில் வசித்து வருகிறார்.

சாந்தி கும்பாரஅள்ளியில் புதிய வீடு கட்டி வந்ததால் தனது மகனுடன் பி.துரிஞ்சிப்பட்டியில் உள்ள ஒருவருடைய வீட்டின் மேல் மாடியில் வசித்து வந்தார். கடந்த மாதம் 10-ந்தேதி சாந்தி வீட்டில் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது மகன் நவீன்குமார் தலையில் காயத்துடன் இருந்தார்.

இதுகுறித்து பொம்மிடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் சாந்தியை கொலை செய்ததாக, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது மகன் நவீன்குமாரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

சாந்தியின் வீட்டிற்கு வெளிஆட்கள் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். இதை நவீன்குமார் கண்டித்துள்ளார். கடந்த மாதம் 9-ந்தேதி இரவு இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது சாந்தி கிரைண்டர் கல்லால் தாக்கியதில் நவீன்குமாருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த நவீன்குமார், சாந்தியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்தது, நவீன்குமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் செய்திகள்