கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பெண் வார்டன் புனிதா கோவை கோர்ட்டில் சரண் - சிறையில் அடைப்பு

கோவையில் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பெண் வார்டன் புனிதா கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவருக்கு எதிராக மாதர் சங்க நிர்வாகிகள் கோ‌ஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-08-01 23:30 GMT

கோவை,

கோவை அருகே உள்ள சேரன்மாநகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 45). இவர் கோவை ஹோப் காலேஜ் பாலரங்கநாதபுரத்தில் தர்‌ஷனா என்ற பெயரில் மகளிர் விடுதி நடத்தி வந்தார். இந்த விடுதியில் கோவையில் படித்து வரும் கல்லூரி மாணவிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்த இளம்பெண்கள் தங்கி இருந்தனர்.

இங்கு தண்ணீர் பந்தல் ரோட்டை சேர்ந்த புனிதா (32) என்பவர் வார்டனாக பணியாற்றினார். இவர் இங்கு தங்கி இருந்த கல்லூரி மாணவிகளை ஓட்டலுக்கு அழைத்துச்சென்று, அவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்ததுடன், அவர்களை ஜெகநாதன் மற்றும் சிலரிடம் உல்லாசமாக இருக்க வற்புறுத்தி அவர்களை தவறான பாதைக்கு அழைத்துள்ளார்.

அதற்கு மறுத்த மாணவிகள், அங்கிருந்து விடுதிக்கு வந்து தங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கோவை வந்து இது தொடர்பாக பீளமேடு போலீசில் புகார் செய்தனர். அத்துடன் மாணவிகளும், பெண்களும் அந்த விடுதியில் இருந்து காலி செய்து விட்டு சென்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் ஜெகநாதன், புனிதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த அவர்கள் இருவரும் தலைமறைவானார்கள். இதற்கிடையே, நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள ஒரு கிணற்றில் ஜெகநாதன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த புனிதாவை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

பெங்களூரு, மூணாறு ஆகிய பகுதிகளில் தனது காதலனுடன் சுற்றிய புனிதா, அடிக்கடி இடத்தை மாற்றி வருவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூரு, மூணாறு விரைந்து அங்கு முகாமிட்டு, செல்போன் எண்ணை வைத்து அவர் எங்கு பதுங்கி இருக்கிறார் என்பது குறித்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் திடீரென்று புனிதா நேற்று காலையில் கோவை 6–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு கண்ணன் முன்னிலையில் சரண் அடைந்தார். அவரை வருகிற 14–ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு கண்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் புனிதாவை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோர்ட்டில் புனிதா சரண் அடைந்துள்ளார் என்பதை அறிந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள், கோர்ட்டு வளாகத்தில் திரண்டனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததால் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போலீசார் புனிதா முகம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக முகத்தை மூடியபடி அவரை வெளியே அழைத்து வந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த மாதர் சங்க நிர்வாகிகள், புனிதாவுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் புனிதாவை அங்கிருந்து பாதுகாப்புடன் போலீஸ் வாகனத்துக்கு அழைத்துச்சென்று, கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:–

புனிதா இதுவரை எத்தனை கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச்சென்று உள்ளார்?, இந்த வழக்கில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது? தொழில் அதிபர்களிடம் பணம் வாங்கினாரா?, ஜெகநாதன் எப்படி இறந்தார்? அவர் சாவுக்கும், புனிதாவுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருக்கிறது.

இது தொடர்பாக புனிதாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளோம். அதற்கான மனு இன்றோ (வியாழக் கிழமை) அல்லது நாளையோ (வெள்ளிக்கிழமை) கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்