குன்னம் குறுவட்ட அளவில் மாணவிகளுக்கான கால்பந்து போட்டி குரும்பலூர் அரசு பள்ளி முதலிடம்

குன்னம் குறுவட்ட அளவில் மாணவிகளுக்கான கால்பந்து போட்டியில் குரும்பலூர் அரசு பள்ளியை சேர்ந்த அணிகள் முதலிடம் பிடித்தன.

Update: 2018-08-01 22:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வி துறை சார்பாக பெரம்பலூர் மற்றும் குன்னம் குறுவட்ட அளவிலான 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கான தனித்தனியே 16 வகையான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. குன்னம் குறுவட்ட அளவிலான போட்டிகள் பெரம்பலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் ஆலத்தூர் மற்றும் வேப்பூர் ஒன்றியங்களை சார்ந்த அனைத்து வகை பள்ளிகளில் இருந்து மாணவ-மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியும், மாணவர்களுக்கு கால்பந்து போட்டியும் தனித்தனியே நடத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டனர்.

இதில் 14, 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கூடைப்பந்து போட்டியில் செயின்ட் ஆண்ட்ரூஸ் பள்ளியும், 19 வயதிற்குட்பட்ட போட்டியில் மருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தை பிடித்தன. இதேபோல் 14, 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கூடைப்பந்து போட்டியில் செட்டிகுளம் லிட்டில் பிளவர் பள்ளியும், 17 வயதிற்குட்பட்ட போட்டியில் பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியும் முதலிடத்தை பிடித்தன. மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கால்பந்து போட்டியின் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இன்று (வியாழக்கிழமை) மாணவிகளுக்கு மட்டும் கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளது.

பெரம்பலூர் குறுவட்ட அளவிலான பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை ஒன்றியங்களை சார்ந்த அனைத்து வகை பள்ளிகளில் இருந்து 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கால்பந்து போட்டிகள் குரும்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தனித்தனியே நடத்தப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் அணியினர் கலந்து கொண்டனர்.

இதில் 14 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில் எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடத்தை பிடித்தன. 17, 19 வயதிற்குட்பட்ட கால்பந்து போட்டியில் குரும்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி அணிகள் முதலிடத்தை பிடித்தன. இன்று 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கபடி போட்டிகள் ஆலம்பாடி அரசினர் ஆதிதிராவிட நல பள்ளியில் நடைபெற உள்ளது. வெற்றி பெற்ற அணிகள் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பெரம்பலூர் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் செய்திருந்தார். 

மேலும் செய்திகள்