அடுத்தவர் நிலத்தை கிரையம் செய்து தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி தந்தை, மகன் மீது போலீசார் வழக்கு

திருச்சி கே.சாத்தனூரில் அடுத்தவர் நிலத்தை கிரையம் செய்து தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி செய்த தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2018-08-01 22:15 GMT
திருச்சி,

திருச்சி கிழக்கு புலிவார்டு ரோடு பகுதியை சேர்ந்தவர் காசிமாயன்(வயது48). இவர் சொந்தமாக வீடு கட்ட எண்ணினார். அதற்காக திருச்சி மாநகர் எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு மனைகளை பார்வையிட்டார். அப்போது திருச்சி கே.கே.நகர் கழத்துவீடு பகுதியை சேர்ந்த சுப்பையா மற்றும் அவரது மகன் செந்தில்வேல் ஆகியோரின் தொடர்பு காசிமாயனுக்கு கிடைத்தது. பின்னர் அவர்களிடம், வீடு கட்ட நல்ல இடமாக இருந்தால் சொல்லுங்கள் என கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது. வீட்டுமனை வாங்கும் ஆர்வத்தை தெரிந்து கொண்ட தந்தை-மகன் இருவரும் கே.சாத்தனூர் பகுதியில் நல்ல இடம் இருப்பதாககூறி காசிமாயனை அழைத்து சென்று காட்டி இருக்கிறார்கள்.

அவருக்கும் நிலம் பிடித்துபோக, முன்பணமாக ரூ.14 லட்சத்தை சுப்பையா மற்றும் அவரது மகன் செந்தில்வேல் ஆகியோரிடம் கொடுத்துள்ளார். மேலும் நிலத்தை 2013 முதல் 2016-க்குள் அதாவது மூன்றாண்டுக்குள் கிரையம் செய்து கொள்வதாக ஒப்பந்தம் போட்டு கொண்டுள்ளனர்.இந்த நிலையில் 2016-ம் ஆண்டு மே மாதம் நிலத்தை கிரையம் செய்யும் ஆர்வத்தில் இருந்த காசிமாயன், அந்த இடத்தை பார்த்து வருவதற்காக கே.சாத்தனூர் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு, அந்த இடத்தை பராமரித்து வேலி அமைக்கும் பணியில் 2 பேர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அதைக் கண்டு அதிர்ந்துபோன அவர், அங்கிருந்தவர்களிடம் இந்த இடத்தை நீங்கள் ஏன் பராமரித்து வேலி அமைக்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், இது எங்களுக்கு சொந்தமான இடம். நீங்கள் எதற்காக கேட்கிறீர்கள்? என மறுகேள்வி எழுப்பினார்கள்.

அடுத்தவர் நிலத்தை காட்டி கிரையம் செய்து தருவதாக தந்தை-மகன் தன்னை ஏமாற்றி விட்டதாக காசிமாயன் உணர்ந்தார். இதுகுறித்து சுப்பையா, அவரது மகன் செந்தில்வேல் ஆகியோரை சந்தித்து, முன்பணமாக கொடுத்த ரூ.14 லட்சத்தை திரும்ப தாருங்கள் என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், பணம் தர மறுத்ததுடன் அவரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர், திருச்சி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மோசடி தொடர்பாக திருச்சி மாநகர போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில், திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் சுப்பையா, அவரது மகன் செந்தில்வேல் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 406, 420 மற்றும் 506(2) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்