நாளை ஆடிப்பெருக்கு விழா: திருச்சி காவிரி ஆற்றில் தடுப்புகளை தாண்டி குளிக்க தடை

ஆடிப்பெருக்கு விழா நாளை (வெள்ளிக் கிழமை) கொண்டாடப்படுகிறது. திருச்சியில் காவிரி ஆற்றில் தடுப்புகளை தாண்டி குளிக்காத வகையில் தடை ஏற்படுத்தப்படுகிறது. படித்துறைகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடக்கிறது.;

Update: 2018-08-01 23:00 GMT
திருச்சி,

ஆடி மாதம் 18-ந்தேதி ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது. காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுவது வெகு சிறப்பாகும். தமிழகத்தில் காவிரி ஆறு நுழையும் ஒகேனக்கல் முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

திருச்சியில் அம்மாமண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட பக்தர்கள் அதிக அளவில் வருவது உண்டு. படித்துறையில் வாழை இலை விரித்து அதில் மஞ்சள் பிள்ளையார் வைத்து, தேங்காய், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம், பழ வகைகள் உள்பட மங்கல பொருட்களை படையலிட்டு பூஜை செய்வது வழக்கம். காவிரி ஆற்றிற்கும் தீபாராதனை காட்டி வழிபட்டு நன்றி தெரிவிப்பார்கள்.

புதுமண தம்பதிகள் ஆற்றில் புனித நீராடி புதிய ஆடைகள் அணிந்து கொள்வார்கள். மேலும் திருமணத்தின் போது மணமக்கள் அணிந்த மாலைகளை ஆற்றில் கொண்டு வந்தும் விடுவார்கள். மூத்த சுமங்கலி பெண்களிடம் புதுமண தம்பதிகள் ஆசி பெறுவார்கள். மேலும் சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக்கொள்வார்கள்.

அதேபோல திருமணமாகாத இளம்பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டி கையில் மஞ்சள் கயிறு கட்டிக்கொள்வது வழக்கம். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் வகையில் ஆற்றங்கரையோரம் உள்ள வேப்ப மரத்திலும் மஞ்சள் கயிறு கட்டுவது உண்டு. சுமங்கலி பெண்கள் தாலிக்கயிறும் மாற்றிக்கொள்வார்கள்.

குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினர்களும், இளைஞர்களும் கைகளில் மஞ்சள் கயிறு கட்டுவது உண்டு. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி காவிரி தாய்க்கு வழிபாடு நடத்தி நன்றி செலுத்துவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். காவிரி ஆறு படித்துறைகளில் கூட்டம் அலைமோதும். காவிரியில் தற்போது தண்ணீர் இருபுறமும் கரையை தொட்டப்படி பாய்ந்தோடுகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு (2017) காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தது. ஆற்றின் நடுப்பகுதியில் ஒரு சில இடங்களில் ஓடை போல ஓடியது. இதனால் மணற்பரப்பில் குழி தோண்டி ஊற்று தண்ணீரை வரவழைத்து வழிபாடு நடத்தினர். ஆனால் இந்த ஆண்டு நிலைமை அப்படி இல்லை. தமிழகத்தில் காவிரி கரையில் மழை இல்லாவிட்டாலும் கர்நாடக மாநிலத்தில் பெய்த மழையின் காரணமாக தற்போது தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் இந்த ஆண்டு வெகு சிறப்பாக ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.

திருச்சியில் அம்மாமண்டபம் படித்துறையை போல, காவிரி கரையோரமான கருடமண்டபம், கீதாபுரம், ஓடத்துறை, அய்யாளம்மன் படித்துறை உள்ளிட்ட படித்துறைகளில் கொண்டாடப்படும். இதையொட்டி முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் படித்துறைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை தாண்டி குளிக்க தடை விதிக்க முடிவு செய்துள்ளனர். ஆற்றில் தடுப்புகளுக்குள் நின்று பக்தர்கள் குளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட உள்ளது.

மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர்கள் மயில்வாகனன், நிஷா ஆகியோர் நேற்று காலை அம்மாமண்டபம் படித்துறை, கருடமண்டப படித்துறை, கீதாபுரம் படித்துறை உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் ராமச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், தீயணைப்பு துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.

அம்மாமண்டபம் படித்துறையில் மக்கள் வருவதற்கு ஒருவழியும், வெளியில் செல்வதற்கு ஒரு வழியும் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் தடுப்புகளை தாண்டி மக்கள் குளிக்க அனுமதிக்கப்படாத நிலையில் ஷவர்கள் அமைத்து அதில் குளிக்கவும், பெரிய தொட்டிகளில் தண்ணீர் நிரப்பியும் குளிக்க வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதற்கிடையில் ஆடிப்பெருக்கு விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கி பேசியதாவது:-

முக்கொம்பு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், கீதாபுரம், காவிரி பாலம், பனையக்குறிச்சி, வேங்கூர், திருவளர்சோலை, கம்பரசம்பேட்டை படித்துறை, கம்பரசம்பேட்டை தடுப்பணை, பெட்டவாய்த்தலை பனங்காவேரி, திருப்பராய்த்துறை சிவன் கோவில் அருகில், தொட்டியம், ஸ்ரீராமசமுத்திரம், முசிறி, பரிசல் ரோடு ஆகிய இடங்களில் நாளை பொதுமக்கள் அதிக அளவில் கூடி புனித நீராடுவார்கள்.

மேற்குறிப்பிட்ட இடங் களில் படித்துறை அருகில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். காவிரி ஆற்றில் படித்துறை இல்லாத இடங்களில் புனித நீராட பொதுமக்களின் நலன் கருதி போலீசார் தடைசெய்ய வேண்டும்.

தீயணைப்புத்துறையினர் மீட்பு உபகரணங்களை அம்மா மண்டபம், காவிரி பாலம் போன்ற மக்கள் கூடும் இடங்களில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். போலீசார் கூடுதல் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். மேலும் காவிரி ஆற்றில் ஆழமான பகுதியில் இறங்க வேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருக்க வேண்டும். மக்கள் கூடும் இடங்களில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். முக்கொம்பு, வாத்தலை பகுதிகளில் இருந்து வாகனங்கள் வருவதற்கு போலீசார் அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சங்கரநாராயணன், உதவி கலெக்டர்கள் ரவிச்சந்திரன்(முசிறி), பாலாஜி(லால்குடி), பொன்ராமர்(ஸ்ரீரங்கம்), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பழனிதேவி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) செல்வகணேஷ் மற்றும் தாசில்தார்கள், மாநகராட்சி, போலீஸ் துறை அதிகாரிகள், தீயணைப்புத்துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாநகர போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். முக்கொம்பு மேலணையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் நேற்று ஆய்வு மேற்கொண்டார். 

மேலும் செய்திகள்