மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.2½ கோடி தங்கம்-வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2½ கோடி தங்கம் - வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. விமானநிலைய ஒப்பந்த ஊழியர்கள் உள்பட 8 பேர் சிக்கினர்.

Update: 2018-08-01 23:00 GMT
செம்பட்டு,

திருச்சி விமானநிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, மும்பை உள்ளிட்ட உள்நாட்டு விமான சேவைகளும் நடந்து வருகிறது. சமீபகாலமாக வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமானநிலையத்திற்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவது அதிகரித்துள்ளது. விமானநிலையத்தில் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளின் சோதனைகளில் பல முறை கடத்தல் தங்கங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.

இந்த நிலையில் திருச்சி விமானநிலையத்தில் பணியாற்றும் தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் சிலர் மூலம் தங்கம் கடத்தப்படுவதாகவும், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்காமல் அந்த தங்கத்தை ஒப்பந்த ஊழியர்கள் பத்திரமாக வெளியே கொண்டு வந்து கடத்தல்காரர்களிடம் கொடுப்பதாகவும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இந்த நிலையில் மலேசியாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் இரவு திருச்சி விமானநிலையம் வந்தனர். இந்தநிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு இரவு 10.40 மணி அளவில் மலேசியா விமானம் வந்தது. அப்போது விமானத்தில் உள்ள பயணிகளின் உடைமைகளை இறக்குவதற்காக தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் 5 பேர் விமானத்தில் ஏறினர். விமானத்தில் இருந்த பயணிகளும் இறங்குவதற்கு தயாராகினர். அந்த நேரத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விமானத்தில் ஏறினர். குறிப்பிட்ட 3 பயணிகளிடம் ஒப்பந்த ஊழியர்கள் நேரடியாக சென்று பைகளை பெற்றனர்.

அப்போது வருவாய் பிரிவு அதிகாரிகள், பயணிகளை விமானத்தில் இருந்து இறங்க வேண்டாம் ஒரு சில நிமிடம் காத்திருக்கும்படி கூறினார். இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது குறிப்பிட்ட பயணிகளிடம் பைகளை நேரடியாக பெற்று கையில் வைத்திருந்த ஒப்பந்த ஊழியர்கள் 5 பேரையும், அதனை அவர்களிடம் கொடுத்த பயணிகளையும் அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்தனர். அவர்கள் 8 பேரையும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி அழைத்து சென்றனர்.

ஒப்பந்த ஊழியர்கள் வைத்திருந்த பைகளில் தங்க நகைகள், தங்க கட்டிகள், வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன. இதைத்தொடர்ந்து அதிலிருந்த தங்கத்தை எடையிட்டு அளந்தனர். இதில் 6½ கிலோ வரை இருந்தது தெரிந்தது. அதன் மதிப்பு ரூ.2½ கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் வெளிநாட்டு கரன்சிகள் ரூ.10 லட்சத்து 93 ஆயிரம் வரை இருந்தது. இதையடுத்து கடத்தி வரப்பட்ட தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை மத்திய வருவாய் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ஒப்பந்த ஊழியர்கள் 5 பேரையும், 3 பயணிகளையும் பிடித்து விசாரித்தனர்.

விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்கத்தை ஒப்பந்த ஊழியர்களிடம் கொடுத்து விட்டு வெளியில் வந்து அந்த பயணிகள் பெற இருந்ததும், ஒப்பந்த ஊழியர்களும் சுங்கத்துறை சோதனையில் சிக்காத வகையில் அதனை நைசாக எடுத்து வெளியில் வந்து பயணிகளிடம் ஒப்படைக்க இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 8 பேரையும் விமானநிலையத்தில் ஒரு அறையில் வைத்து தனித்தனியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணை நேற்று பகல் வரை நீடித்தது.

விமானத்தில் தங்கம் கடத்தி வரக்கூடிய பயணிகளின் அடையாளத்தை கூறி, அவர் களிடம் பையை பெற ஒப்பந்த ஊழியர்களுக்கு தெரிவித்தவர் யார்? எனவும், இதற்கு முன்பு இதுபோல் கடத்தல் தங்கத்தை விமானநிலையத்தில் இருந்து வெளியே எடுத்து சென்று கொடுக்கப்பட்டதா? எனவும் தீவிரமாக விசாரித்தனர். இதில் பல தகவல்கள் கிடைத்தது. கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் சிக்காமல் வெளியில் கொண்டு சென்று கொடுத்தால் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணம் அதிக அளவில் கைமாறப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து முதல் கட்ட விசாரணையில் 3 ஒப்பந்த ஊழியர்களை மட்டும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டு எண் 1-ல் நேற்று மதியம் ஆஜர்படுத்தினர். அவர்களது பெயர் விவரம் வருமாறு:- 1) முகமது சரிப் (வயது22), திருகோகர்ணம், புதுக்கோட்டை மாவட்டம், 2) பிரதீப் சவுரிராஜ் (20), பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம், 3) மகிமை பிரபு (23), பெரியகுளம், தேனி மாவட்டம்.

மேலும் 3 பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. 3 பேரையும் வருகிற 14-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு கவுதமன் உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைக்க வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் காரில் அழைத்து சென்றனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற 2 ஊழியர்களிடமும், 3 பயணிகளிடமும் ஒரு புறம் தனியாக விசாரணை நடந்து வருகிறது. ஒப்பந்த ஊழியர்களுடன் தொடர்பு வைத்துள்ள கடத்தல்காரர்கள் குறித்து அதிகாரிகள் துருவி, துருவி விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு பின் மற்ற 5 பேரும் கைது செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். திருச்சி விமானநிலையத்தில் தங்கத்தை கடத்த ஒப்பந்த ஊழியர்களே துணைபுரிந்து சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்