தஞ்சையில் அரசு டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்

மத்தியஅரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி தஞ்சையில் அரசு டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-08-01 23:00 GMT
தஞ்சாவூர்,


மத்தியஅரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு டாக்டர்களுக்கும் வழங்க வலியுறுத்தி தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை, ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் பணி புரியும் டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

இந்த போராட்டம் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும்(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இது குறித்து அரசு டாக்டர்கள் கூறும்போது, அடுத்த கட்டமாக வருகிற 5–ந் தேதி முதல் 18–ந் தேதி வரை கோரிக்கைகள் அடங்கிய துண்டுபிரசுரம் வினியோகம் செய்ய இருக்கிறோம். 20–ந் தேதி ஆரம்பசுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனை, மருத்துவகல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம். 24–ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க இருக்கிறோம்.


27–ந் தேதி ஒத்துழையாமை இயக்கம் நடத்துகிறோம். அன்றைக்கு அனைத்து மறுசீராய்வு கூட்டம், வகுப்புகளை புறக்கணிப்பதுடன், தமிழகஅரசுக்கு மருத்துவமனை அறிக்கையை அனுப்ப மாட்டோம். மேலும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வை புறக்கணிப்போம்.

அடுத்தமாதம் 12–ந் தேதி கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கோட்டையை நோக்கி ஊர்வலமாக செல்ல உள்ளோம். 21–ந் தேதி மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் மருத்துவகல்லூரி மருத்துவமனை, ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணி புரியும் அரசு டாக்டர்கள் 900 பேர் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அதேபோல மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி கும்பகோணத்தில் அரசு டாக்டர்கள் 36 பேர் கோரிக்கை அட்டையை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்