மீன்பிடி தடை காலம் முடிந்தது குளச்சலில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்

மீன்பிடி தடை காலம் முடிந்ததையொட்டி குளச்சலில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்.

Update: 2018-08-01 22:45 GMT
குளச்சல்,

கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் இரண்டு மாத காலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மேற்கு கடற்கரை பகுதியில் கடந்த ஜூன் மாதம் 1–ந் தேதி முதல் ஜூலை மாதம் 31 –ந் தேதி வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நாட்களில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் நேற்று முன்தினத்துடன் முடிந்தது. இதையடுத்து குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பெரும்பாலான விசைப்படகு மீனவர்கள் நேற்று அதிகாலையில் கடலுக்கு புறப்பட்டனர். அவர்கள் 10 முதல் 15 நாட்கள் வரை கடலில் தங்கி மீன்பிடித்துவிட்டு கரை திரும்புவார்கள்.

கரை  திரும்பும் போது நவரை, கேரை, சூரை, நாகண்டம் போன்ற விதவிதமான மீன்கள் பிடித்து வரப்படும். இவற்றை வாங்கி செல்ல கேரள வியாபாரிகள் மற்றும் வெளிமாநில வியாபாரிகள் குளச்சல் துறைமுகத்தில் குவிவார்கள். அதன் பின்பு, குளச்சல் மீன்பிடி துறைமுகம் மீண்டும் களை கட்ட தொடங்கும்.

குளச்சல் பகுதியில் கடந்த 2 நாட்களாக, சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் காணப்பட்டது. நேற்று காலையில் சூறாவளி காற்று சற்று தணிந்தது. ஆனால் பல இடங்களில் அலைகளின் கொந்தளிப்பு காணப்படுகிறது. எனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் எச்சரிக்கையுடன் தொழில் செய்யுமாறு மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்